சென்னை: தேர்தல் ஆணையம் மற்றும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி காவல் துறையில் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் அன்புமணி இடையே மோதல் நிலவும் சூழலில், 2026 ஆகஸ்ட் வரை பாமக தலைவராக அன்புமணி செயல்படுவார் என்று தெரிவித்த தேர்தல் ஆணையம், மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்புக்கு ஒதுக்கியது.
ஆனால், அன்புமணி போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்திருப்பதாக தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் முறையிட்டார். இதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் ராமதாஸ் சார்பில் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து அன்புமணி அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவின் நகல் டெல்லி காவல் ஆணையர் மற்றும் சிபிஐ இயக்குநருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறும்போது, "போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து அங்கீகாரம் பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையமும், அன்புமணியும் கூட்டாக சதி செய்துள்ளனர். அவர்கள் மீது சிபிஐ விசாரணை கோரி புகார் மனு அளித்திருக்கிறோம்” என்றார்.
ஜி.கே.மணி மீது நடவடிக்கை: சென்னையில் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் கூறும்போது, “அன்புமணி தரப்பை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் மீதும், அன்புமணி மீதும் நடவடிக்கை எடுக்குமாறு ராமதாஸிடம் கடிதம் பெற்று, டெல்லி காவல் துறையில் ஜி.கே.மணி புகார் கொடுத்துள்ளார்.
பாமகவை உடைத்து,கட்சியைக் கைப்பற்ற ஜி.கே.மணி முயல்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அன்புமணியிடம் தெரிவித்துள்ளோம். பாமக தலைவராக அன்புமணி தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.