சேலத்தில் நடந்த பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் கண்கலங்கினார். உடன்செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பரசுராமன், கவுரவத் தலைவர் ஜி.கே மணி எம்எல்ஏ. படம் : எஸ்.குரு பிரசாத்

 
தமிழகம்

“என்னைப் போல தகப்பன் வேறு யாருக்காவது கிடைப்பார்களா?” - ராமதாஸ் கண்ணீர்

செய்திப்பிரிவு

பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸை கட்சித் தலைவராகவும், ஜி.கே.மணி கவுரவத் தலைவராகவும், ஸ்ரீகாந்தி பரசுராமன் செயல் தலைவராகவும் பொதுக்குழுவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், கூட்டணி அமைக்கராமதாஸுக்கு அதிகாரம் வழங்குவது உட்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ராமதாஸ் பேசியது: இந்த நேரத்தில் எதைப் பேசுவது, எதை விடுவது என எனக்குள்ளே ஒரு குழப்பம் நீடிக்கிறது. ஏனெனில், எனக்கு இருக்கிற ஆதங்கத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள போதுமான அவகாசம் இல்லை. நீங்கள் ஊர் திரும்பியதும், யாராவது கேட்டால், நான் அமைக்கும் அந்த கூட்டணி நிச்சயம் தேர்தலில் வெற்றிக் கூட்டணியாக இருக்கும், எனக் கூறுங்கள்.

ஒரு கூட்டம், ஒரு கும்பல் எல்லாம் நான் வளர்த்த பிள்ளைகள். நான் பொறுப்பு கொடுத்த பிள்ளைகள். ஆனால், இப்போது என்னையும், ஜி.கே.மணியையும் தூற்றுகிறார்கள். என்னை நேரடியாக தாக்கத் தொடங்கி விட்டனர். தமிழக மக்கள் அனைவரும் எனக்கு சொந்தங்கள் தான். உறவினர்கள் தான். அவர்கள் எல்லாம் என்னை எப்போதும் நேசிப்பவர்கள்.

இப்போது நடக்கிற செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழு எல்லாம் பார்க்கும்போது நூற்றுக்கு 95 சதவீதம் பாட்டாளி மக்கள் என் பின்னால் தான் இருக்கிறார்கள். அன்புமணி பின்னால் 5 சதவீதம் பேர் கூட இல்லை. ஆனால், லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்து பம்மாத்து வேலை செய்து வருகிறார். வரும் தேர்தலில், அன்புமணிக்கு சரியான பாடம் புகட்டுவோம். வரும் தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன்.

அந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இந்த மக்கள், என் பின்னால் பல ஆண்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள் என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. உனக்கு (அன்புமணி) யார் இருக்கிறார்கள். ஐந்து பேர் கூட இல்லை. என்னைப் போல தகப்பன் வேறு யாருக்காவது கிடைப்பார்களா? எல்லாம் யாரால் கிடைத்தது.

எந்த பதவிக்கும் நான் ஆசைப்பட்டதில்லை. அப்படி ஆசைப்பட்டிருந்தால் இந்திய அளவில் பெரிய பதவிகளுக்கு நான் வந்திருப்பேன். ஆனால், எனக்கு விருப்பமில்லை. அந்த சத்தியம் காரணமாகவே அன்புமணி பதவிக்கு வந்தார். அவருக்கு என்ன குறை வைத்தேன். அன்புமணியை நினைத்தால் தூங்க முடியவில்லை. என்னை துண்டு துண்டாக வெட்டிப் போட்டிருக்கலாம். என்னை மிகவும் கேவலமாக பேசுகிறார்கள். எனக்கு ஒரு நாள் தூக்கம் வந்தது.

கனவில் எனது தாய் வந்து, ஏன் அழுகிறாய் என்று கேட்டார். (இந்த நேரத்தில் டாக்டர் ராமதாஸ் கண்ணீர் விட்டு அழுதார்) மகனை சரியாக வளர்க்கவில்லை. மார்பிலும், முதுகிலும் ஈட்டியை வைத்து குத்துகிறார் என்றேன். சில்லறை பசங்களை வைத்து என்னை தினமும் அசிங்கப்படுத்துகிறார். அன்புமணி பின்னால் 5 சதவீத மக்கள் கூட இல்லை. செலவு செய்து கூட்டத்தை கூட்டி பிரமாண்டத்தை காட்டுகிறார். இந்த தேர்தல் அவருக்கு பதில் தரும். இந்தத் தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பேன். அது வெற்றியை தரும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பேசிய ஸ்ரீகாந்தி, ‘‘ராமதாஸின் ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்கப் போகிறீர்கள். எங்களைப் பார்த்து திமுகவின் கைக்கூலிகள் என்று சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்கள் ஆர்எஸ்எஸ் அடிமைகள். தேர்தலில் ராமதாஸ் அமைக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். 25 எம்எல்ஏ.க்களோடு சட்டசபைக்கு செல்வோம். ஆட்சியிலும் பங்கு பெறுவோம்’’ என்றார். கூட்டத்தில், ஜி.கே.மணி, எம்எல்ஏ அருள், மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT