காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியில் பாமக சார்பில் மாவட்டச் செயலர் பெ.மகேஷ்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் நிறுவனர் தனது அணி சார்பில் மாவட்டச் செயலர் சு.ஸ்ரீதர் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார்.
பாமக அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவாகவும், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வந்தது. தற்போது தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பாமக சின்னம் அன்புமணி ராமதாஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, மாவட்டச் செயலர் பெ.மகேஷ்குமார் உத்திரமேரூரில் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தரப்பு மாவட்டச் செயலர் சு.ஸ்ரீதர் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார். இந்த தொகுதியில் 5 முறை வெற்றி பெற்ற திமுக மாவட்டச் செயலர் க.சுந்தர் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்துப் போட்டியிடும் பாமக வேட்பாளர் மகேஷ்குமார், கடந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு 91,117 வாக்குகள் பெற்று, 11,595 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போதைய எம்எல்ஏ எழிலரசனிடம் தோல்வியடைந்தார்.
மக்களிடம் செல்வாக்கு
உத்திரமேரூர் அதிகாரப்பூர்வ பாமக வேட்பாளர் பெ.மகேஷ்குமார் என்றாலும், நிறுவனர் ராமதாஸுக்கு வன்னியர் சமூக மக்களிடம் ஒரு குறிப்பிட்ட செல்வாக்கு உண்டு.
இந்நிலையில், நிறுவனர் ராமதாஸ் தனது தரப்பு மாவட்டச் செயலர் சு.ஸ்ரீதரைப் போட்டி வேட்பாளராக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் எந்தக் கட்சியின் சார்பில் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார்கள், எந்தச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.