தமிழகம்

பொதுக்குழு கூட்ட விவகாரம்: ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் திண்டிவனத்தில் மோதல்

செய்திப்பிரிவு

சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸின் பேரனும், ஸ்ரீகாந் தியின் மகனுமான சுகந்தன், அன்புமணி குறித்து விமர்சனம் செய்திருந்தார். இது தொடர்பாக பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்களிடையே சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் விமர்சனப் பதிவுகளை பதிவேற்றம் செய்தனர்.

அந்த வகையில் சுகந்தன், திண்டிவனம் வந்தால் அவரை முற்றுகையிடுவோம் என பாமக மாநில இளைஞரணி துணைச் செயலாளரும் அன்புமணியின் ஆதரவாளருமான ராஜேஷ் முகநூலில் பதிவிட்டார். இதற்கிடையில் நேற்று திண்டிவனத்தில் உள்ள ராமதாஸ் வீட்டின் அருகே உள்ள தேநீர் கடையில் அன்புமணி ஆதரவாளரான ராஜேஷ் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சமூக நீதிப் பேரவையின் மாநில துணைத் தலைவரும், ராமதாஸின் ஆதரவாளருமான ராஜாராம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முகநூல் பதிவு குறித்து தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் காவல் ஆய்வாளர் ஆனந்த ராஜ், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் திண்டிவனம் காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில் ராமதாஸ் இல்லத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT