உள்படம்: ராம.ரவிக்குமார்

 
தமிழகம்

“திருப்பரங்குன்றம் வழக்கில் முருகன் அருளால் வெற்றி” - ராம.ரவிக்குமார் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

மதுரை: திருப்பரங்குன்றம் மேல் முறையீட்டு வழக்கில் முருகன் அருளால் வெற்றி கிடைத்துள்ளது என மனுதாரர் ராம.ரவிக்குமார் தெரிவித்தார். உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்திந்த பிரதான மனுதாரர் ராம ரவிக்குமார் கூறுகையில், முருகன் அருளால் வெற்றி கிடைத்துள்ளது.

இந்த வெற்றியை ராஜகோபாலன் தொடங்கி பூர்ணச்சந்திரன் உள்ளிட்டோருக்கு சமர்ப்பிக்கிறோம். இந்துக்கள் யாரும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இல்லை. மக்களின் மத உணர்வுக்கு எதிராக தமிழக அரசு நடந்து வருகிறது.

திருப்பரங்குன்றத்தில் 2 இடங்களில் தீபம் ஏற்றுவது எந்த தவறும் இல்லை. இது ஆகம விதியை மீறியதாகாது, என்றார். இந்த தீர்ப்பால் இந்து முன்னணி அமைப்பு செயலாளர் ராஜேஷ் மற் றும் நிர்வாகிகள் உயர் நீதி மன்றத்தில் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் நரிமேட்டில் உள்ள பூர்ணசந்திரன் வீட்டுக்குச் சென்று அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். உயர் நீதிமன்ற தீர்ப்பால் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி உட்பட பல்வேறு இடங்களில் பாஜக மற்றும் இந்து அமைப் பினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

அரசியல் அமைப்புக்கு எதிரானது: அனைத்து சாதி அர்ச்சக மாணவர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறுகையில், உடனே தீபம் ஏற்ற வேண்டும் என்ற சிக்கல் இப்போது இல்லை. அடுத்த ஆண்டுதான் இந்த நடைமுறை குறித்து விவாதிக்கப்படும்.

இந்த தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லத்தக்கது அல்ல. தொல்லியல் துறையை கேட்டுதான் முடிவெடுக்க வேண்டும் என்பது வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானது, என்றார்.

SCROLL FOR NEXT