தமிழகம்

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக ராம் மாதவ் நியமனம்: வானதி சீனிவாசன், ம.வெங்கடேசனுக்கும் பொறுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர்களாக இருந்த அரவிந்த்மேனன், சுதாகர் ரெட்டி மாற்றப்பட்டு, புதிய பொறுப்பாளராக ராம் மாதவ் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

நாடு முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கான பாஜக புதிய மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களின் பட்டியலை தேசிய தலைமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழக பாஜகவின் புதிய மேலிடப் பொறுப்பாளராக கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராம் மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உதவ நிர்மல் குமார் சுரானா, டி.கே. அருணா ஆகியோர் புதிய இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, தமிழக பாஜகவின் பொறுப்பாளராகச் செயல்பட்டு வந்த அரவிந்த் மேனன் தற்போது உத்தராகண்ட் மாநிலத்தின் இணைப் பொறுப் பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், இணைப் பொறுப்பாளராக இருந்த சுதாகர் ரெட்டியும் மாற்றப்பட்டுள்ளார். பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆந்திர மாநில இணைப் பொறுப்பாளராகவும், தேசிய செயலாளரான ம.வெங்கடேசன், கேரள மாநிலத்தின் இணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றங்கள் நிலவிவரும் வேளையில், அனுபவம் வாய்ந்த தலைவரான ராம் மாதவ் பொறுப்பேற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT