புதுச்சேரியில் தேசியக் கொடியுடன் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற சென்ற பல்வேறு கட்சிகள், அமைப்பினர்.
படம்: எம்.சம்ராஜ்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் அகில இந்திய சிறப்பு தீவிர வக்காளர் திருத்தத்துக்கு எதிரான மக்கள் மேடை சார்பில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியக் கொடியுடன் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி இன்று நடைபெற்றது.
பேரணிக்கு அகில இந்திய எஸ்ஐஆர்-க்கு எதிரான மக்கள் மேடை ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தர் ராம், மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், மீனவர் அமைப்பு மங்கையர் செல்வன், இளைஞர் பெருமன்றம் எழிலன் உள்ளிட்ட ஒற்றைக் கருத்துடைய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியில், ‘இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கி, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான விலக்குரிமையை ரத்து செய்ய வேண்டும். எஸ்ஐஆர் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களைப் பயன்படுத்தி இனிமேல் தேர்தல்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும். அத்தகைய வாக்காளர் பட்டியல்களின் அடிப்படையில் ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்.
எஸ்ஐஆர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். எஸ்ஐஆர் மூலம் நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும். 2024-ம் ஆண்டுக்கு முந்தைய வாக்காளர் பட்டியல்களை மீண்டும் அடிப்படையாகக் கொண்டு, தேர்தல் ஆணையத்தின் கையேடு மற்றும் இந்தியத் தலைமைத் தணிக்கை அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, வெளிப்படையான பொதுத் தணிக்கைக்குப் பின்னர் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க வேண்டும்.
எஸ்ஐஆர் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் திரும்பப் பெற வேண்டும். எஸ்ஐஆர் தொடர்பான முடிவுகள் எடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆவணங்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்கும் வகையில் விரிவான தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.
ராஜா திரையரங்கம் அருகே தொடங்கிய பேரணி அண்ணா சாலை, எஸ்வி பட்டேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றது. மிஷன் வீதி - எஸ்வி பட்டேல் சாலை சந்திப்பில் போலீஸார் சாலையின் குறுக்கே பேரிகார்டுகளை வைத்து தடுத்தனர். இதையடுத்து பேரணியாக வந்தவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியறுத்தி கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.