மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் ராஜபாளையம் பகுதியில் அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்கள்.

 
தமிழகம்

மதுரை - கொல்லம் 4 வழிச்சாலை திட்டத்தில் ராஜபாளையம் ரயில்வே மேம்பால பணிகள் நிறைவு

குற்றாலம் செல்வோர் ஸ்ரீவில்லி., ராஜபாளையம் நகருக்குள் வராமல் செல்லலாம்

அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: மதுரை கொல்லம் நான்கு வழிச்சாலை திட்டத்தில் ராஜபாளையம் ரயில்வே மேம்பால பணிகள் நிறைவு பெற்றதால் குற்றாலம், கேரளா செல்லும் வாகனங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் நகருக்குள் வராமல் செல்லலாம்.

தமிழகம்-கேரள மாநிலங்களையும் இணைக்கும் முக்கிய சாலைகளில் ஒன்றான 230 கிலோ மீட்டர் நீளமுள்ள மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக (என்.ஹெச் 744) தரம் உயர்த்தும் பணிகள் கடந்த 2023-ல் தொடங்கி நடந்து வருகின்றன.

இதில் கிருஷ்ணன்கோவில்-ராஜபாளையம் இடையே ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் நகருக்கு வெளியே 27 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 2 ரயில்வே மேம் பாலங்கள், 1 மேம்பாலம், 19 பாலங்கள், 16 சுரங்கப்பாதை, 62 நீர்வழிப்பாதைகள் அமைக் கப்பட்டுள்ளன. இச்சாலையில் அழகாபுரி-கிருஷ்ணன்கோவில் இடையே நத்தம்பட்டியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் 99.7 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஏப்ரல் மாதம் வடுகப்பட்டி-ராஜபாளையம் இடையேயான சாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அழகாபுரி மேம்பாலம், ராஜபாளையம் ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடையாததால் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது ராஜபாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிந்து வாகனங்கள் அவ்வழியே செல்லத் தொடங்கியுள்ளன.

சங்கரன்கோவில் சாலை வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து இணைப்புச் சாலை வழியாக தென்காசி சாலையை அடையலாம்.

இதனால் மதுரையில் இருந்து தென்காசி, குற்றாலம், சபரிமலை மற்றும் கேரளாவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் நகருக்குள் வராமல் செல்ல முடியும்.

குற்றால சீசன் தொடங்கியுள்ள நிலையில், நகர் பகுதியில் வழக்கமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய மதுரை மண்டல அதிகாரிகள் கூறுகையில், மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலை மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ATMS) மற்றும் புதிய புறவழிச்சாலைகள் மூலம், வணிக வாகனங்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்துக்கு பெரிதும் பயனளிக்கும்.

வடுகப்பட்டி-தெற்குவெங்கநல்லூர் இடையேயான 36 கிலோ மீட்டர் தூர நான்கு வழிச்சாலை இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

இதன் மூலம் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், ராஜபாளையம்-மதுரை இடையேயான பயண நேரம் பாதியாக குறையும், என்றனர்.

SCROLL FOR NEXT