தமிழகம்

குழந்தைகளை வளர்க்கும் கடமையை தாய் கைவிட்டுவிட்டால் சமூகம் தனது அடித்தளத்தை இழந்து விடும்: நீதிபதிகள் வேதனை

செய்திப்பிரிவு

கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து தனது 14 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த மற்றொரு நபருக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டு சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு அந்த நபர் மகள் உறவு முறை கொண்ட 10-ம் வகுப்பு படித்து வந்த அந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்தபோது, இதை வெளியே சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று தாயும் மிரட்டியுள்ளார். அதன் பிறகும் தொடர்ந்து அந்த நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இதை வெளியே சொன்னால் ஆசிட் வீசி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால், தனது நிலைமை குறித்து அந்த சிறுமி தன்னைப்பெற்ற, தாயைப் பிரிந்து சென்ற தந்தையிடம் முறையிட்டுள்ளார். பின்னர், அந்த சிறுமி அளித்த புகாரின்பேரில் போலீஸார் சிறுமியின் தாயார் மற்றும் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் பி.வேல்முருகன், எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தாயாரின் ஒழுக்கமற்ற நடத்தை குறைவால் பெற்ற குழந்தைகளுக்கும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வது சமூகத்தில் அன்றாடம் நிகழும் கசப்பான நிகழ்வாகி விட்டது. நமது கலாச்சாரத்தில் தந்தை, குரு, தெய்வத்துக்கு மேலாக பெற்ற தாய்க்குத்தான் முதலிடம் கொடுக்கிறோம். அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிறோம். பெற்ற குழந்தைகளை பாதுகாப்புடன், கண்ணியமாக, ஒழுக்கமாக வளர்ப்பது தாயுடைய கடமை. அந்த புனிதமான கடமையை தாய் கைவிட்டுவிட்டால் அந்த குடும்பம் மட்டுமின்றி இந்த சமூகமும் தனது அடித்தளத்தை இழந்துவிடும்,

இந்த வழக்கில் பெற்ற மகள் என்றும் பாராமல், தன்னால் அந்த சிறுமிக்கு ஏற்பட்ட வன்கொடுமையை தட்டிக்கேட்காமல் அந்தப்பெண், காமுக எண்ணம் கொண்ட நபரின் பாலியல் இச்சைக்கு உடந்தையாக இருந்துள்ளார். இந்த வழக்கில் இருவருக்கும் சரியான தண்டனையைத்தான் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில் தலையிட எந்த காரணமும் இல்லை என்பதால் இருவருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT