ராமநாதபுரம் பாரதி நகர் நெடுஞ்சாலை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்ட அமைச்சர் வி.கே.ராஜீவ்.
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நேற்றிரவு பெய்த மழைக்கே சாலைகள், தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றிரவு பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. ராமநாதபுரம் நகரில் பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவாடனையில் 8 செ.மீ, ராமநாதபுரத்தில் 6.2 செ.மீ, தீர்த்தாண்டதானத்தில் 5 செ.மீ, தொண்டியில் 4.9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வி.கே.ராஜீவ், மழைநீர் தேங்கியுள்ள பாரதி நகர், நேரு நகர் தெருக்கள், பழைய பேருந்து நிலையம், அரண்மனை, கேணிக்கரை, செட்டிய தெரு, ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டார். அப்போது, மழைநீரை வெளியேற்றவும், சாலைகளை செப்பனிடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஓம்சக்தி நகர் பகுதியில் பொதுமக்கள் சிலர் அமைச்சரிடம், இப்பகுதியில் பல தெருக்களில் இதுவரை சாலையே அமைக்கவில்லை. அதனால் மழைக்காலங்களில் மிகவும் கஷ்டப்படுகிறோம். சாலைகள் அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அமைச்சரின் ஆய்வின்போது ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜீவ், “ராமநாதபுரம் நகர் மற்றும் பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை பகுதிகளில் மழைநீரை வெளியேற்றவும், பள்ளங்களை சரி செய்யவும், மழைநீர் கால்வாய்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் முறையாக குழாய்கள் அமைக்காததால் அந்த திட்டம் தோல்வியடைந்துள்ளது. அதனால் முறையாக குழாய்கள் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.” என அமைச்சர் கூறினார்.