தமிழகம்

அக்னி நட்சத்திரத்துக்கு இடையே புதுச்சேரியில் இடி மின்னலுடன் பெய்த மழை

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கோடை அக்னி நட்சத்திர வெயிலிலும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பொழிந்தது.

புதுவையில் கோடை காலமான மார்ச், ஏப்ரலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமானதால் பகலிலும்கூட வீட்டில் மக்கள் முடங்கினர். மே மாத தொடக்கத்திலேயே 100 டிகிரியை வெப்பத்தின் தாக்கம் பதிவானது. இந்நிலையில், அக்னி நட்சத்திரத்தில் வெப்பத்தின் தாக்கம் எப்படியிருக்குமோ என மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளான மே 4-ல் மழை பொழிந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் இரவிலும், சில நாட்களில் அதிகாலையிலும் மழைப் பொழிவு தொடர்ந்தது. இருந்தாலும், பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் புதுச்சேரியில் மழை பொழிவு இருந்தது. வானம் இருண்டு குளிர்ந்த காற்றுடன் பலத்த இடியுடன் இன்று காலை முதல் மழைப் பொழிவு தொடர்ந்தது. இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

இதுகுறித்து காரைக்காலை சேர்ந்த வானிலை ஆர்வலர் பிரபு பிரபாகர் கூறுகையில், ”புதுச்சேரிக்கு கிழக்கே 350 கி.மீ தொலைவில் தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் இதற்கு முக்கிய காரணமானது. தற்போது மேற்கு நோக்கி தாழ்வுப் பகுதி நகர்கிறது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பு குறைவு. வங்கக் கடலிலேயே வலு குறைந்துவிடும்." என்றார்.

SCROLL FOR NEXT