சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இருந்து வட கர்நாடகாவின் உள்பகுதி வரை சுமார் 900 மீட்டர் உயரத்தில், காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்.2) முதல் 4-ம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 4-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
5, 6-ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 7-ம் தேதி தென் தமிழகம், வடக்கு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தின் உள்பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 79 டிகிரி முதல் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வெப்பநிலை வழக்கம்போல இருக்கும். 3, 4, 5-ம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.