சென்னை: தமிழகத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை (ஆக.5) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, இலங்கையின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
மேலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இவற்றின் காரணமாக, இன்று (ஆக.4) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (ஆக.5) திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஆக.6, 7 ஆகிய தேதிகளில், தேனி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆக. 8-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஆக. 4, 5 தேதிகளில் (இன்று மற்றும் நாளை) சென்னை, புறநகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
குமரிக் கடலின் சில பகுதி, தெற்கு வங்கக் கடலின் தென் பகுதி மற்றும் தெற்கு அந்தமான் கடலின் சில பகுதி, தென்மேற்கு வங்கக் கடலின் அநேக பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் ஆக.8-ம் தேதி வரை பலத்த சூறாவாளி காற்று வீசக்கூடும்.
இதுதவிர, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதி, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆக.8-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்படி தேதிகள் வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு:
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, திருவாரூர் மாவட்டம் கொடவாசலில் 7 செ.மீ மழையும், திருவண்ணாமலை மாவட்டம் அருகாவூரில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.