சென்னை: தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை முதல் ஏப்.26-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெலங்கானா முதல் குமரிக்கடல் வரை ராயலசீமா மற்றும் உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை சுமார் 1.5 கிமீ உயரம் வரை நிலவுகிறது.
இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில்) நாளை (ஏப்.21) லேசான மழையும், 22 முதல் 26-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
உள் தமிழக மாவட்டங்களில் நாளை முதல் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.
கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.