சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 13-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு கடலோர கேரளா வரை தமிழகம் வழியாக சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இவை காரணமாக தமிழகத்தில் நாளை (ஆக.8) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஆக.9-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஆக.10 முதல் 12-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஆக.13-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதேபோல் தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஆக.8ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உபாசியில் 6 செ.மீ மழையும், புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடி, அறந்தாங்கி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறையில் தலா 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதேபோல் கோவை மாவட்டம் சின்கோனா, கள்ளக்குறிச்சி மாவட்டம் சூலங்குறிச்சியில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.