பிரதிநிதித்துவப் படம்
சென்னை: “தருமபுரியை சென்னையுடன் இணைக்கத் தேவையான மொரப்பூர் - ராணி மூக்கனூர் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தேவைப்படும் நிலங்களை போர்க்கால அடிப்படையில் கையகப்படுத்திக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலை தளப் பதிவில், “தருமபுரி - மொரப்பூர் இடையே 38 கி.மீ நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக மொரப்பூர் முதல் ராணி மூக்கனூர் வரை 10.221 கி.மீ தொலைவுக்கு புதிய பாதை அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்ட மக்களின் 85 ஆண்டு கால கனவை நனவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தருமபுரி - மொரப்பூர் ரயில்பாதை திட்டம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திட்டம் ஆகும். 2014-ம் ஆண்டு தருமபுரி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் நாடாளுமன்றத்திலும், அடுத்தடுத்து வந்த ரயில்வே அமைச்சர்களிடமும் தொடர்ந்து பேசியதன் பயனாக 2016- 17-ம் ஆண்டுக்கான ரயில்வே துறை நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டம் சேர்க்கப்பட்டது. இத்திட்டத்தை ரூ.358.95 கோடியில் செயல்படுத்தவும் ரயில்வே அமைச்சகம் 2019ம் ஆண்டு பிப்.6-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது.
அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி எனது முன்னிலையில் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் 7 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், இதுவரை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாத நிலையில், அதன் ஒரு பகுதிக்கு இப்போது ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.
மீதமுள்ள 28 கி.மீ தொலைவில் 8 கி.மீ நீள பாதையில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால் நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இத்திட்டத்திற்கு தேவையான 93.11 ஹெக்டேர் நிலங்களில் 46.79 நிலங்கள் கையகப்படுத்தித் தரபட்டுள்ளன. தனியார் பட்டா நிலங்களில் 26.19 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டிருப்பது தான் அடுத்தக்கட்ட பணிகளை இன்னும் தொடங்க முடியாததற்கு காரணம் ஆகும்.
ஒரு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அந்த மாவட்டத்தின் தலைநகரம் மாநிலத் தலைநகருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில் தருமபுரியை சென்னையுடன் இணைக்கத் தேவையான இந்தத் திட்டத்தை செயல்படுத்த வசதியாக அதற்கு தேவைப்படும் நிலங்களை போர்க்கால அடிப்படையில் கையகப்படுத்திக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.