சென்னை: தெற்கு ரயில்வேயில் தமிழக பகுதியில் 6,171 அப்ரன்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிக்கை, வழிகாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாமல் வெளியிடப்பட்டுள்ளதால், தமிழக இளைஞர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரயில்வேயில் தொழில் பழகுநர் (அப்ரன்டிஸ்) தொழிலாளர்கள், ரயில்வேயில் உள்ள காலியிடங்களில் 20 சதவீதம் இடஒதுக்கீட்டு அடிப்படையில் நிரப்பப்படுவார்கள். இவர்கள், ரயில்வேயில் சீனியர் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் மேற்பார்வையில், வேலைகளைக் கற்றுக்கொள்வார்கள். இதற்காக மாதந்தோறும் ரூ.9,600 ஊதியம் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி பொன்மலை மத்திய பணிமனை, சேலம், பெரம்பூர் கேரஜ் மற்றும் வேகன் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், கோவை, அரக்கோணம் பொறியியல் பணிமனை, போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை உள்ளிட தமிழகப் பகுதிகளில் 6,171 அப்ரன்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் ஆக.28 முதல் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெற்கு ரயில்வே சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதேநேரம் இந்த அறிவிப்பில், அப்ரன்டிஸ் தேர்வு வழிகாட்டு விதிமுறையின்கீழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படாமல் உள்ளது.
அதாவது, 2019-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற ஷரத்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகாவின் தட்சிண கன்னடா பகுதி, ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் பகுதி மற்றும் கேரளாவில் இருப்பவர்களும், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு போன்ற பிற மாநிலங்களில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பால் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி பொன்மலை, பெரம்பூரில் உள்ள ரயில்வே பணிமனைக்கு அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதனால், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே தொழிற்சங்கத்தின் மூத்த தலைவர் மனோகரன் கூறியதாவது: கடந்த 2002-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதியிட்ட மனித வள திட்டமிடல் மாஸ்டர் சர்குலர் எனப்படும் ஒருங்கிணைந்த ரயில்வே வாரிய சுற்றறிக்கை மற்றும் 1984-ம் ஆண்டு மே 5-ம் தேதியிட்ட ஆக்ட் அப்ரன்டிஸ் தேர்வு வழிகாட்டி விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்படும் இடங்கள் அருகில் (100 கி.மீ சுற்றளவுக்கு உட்பட்ட) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆனால், இந்த விதிகள் பின்பற்றப்படாமல் ஆக்ட் அப்ரன்டிஸ் நியமனங்களில் வடஇந்தியர்கள் தமிழகத்தில் நுழைந்து வந்தனர். இந்த விதிமீறலை சுட்டிக்காட்டியதை அடுத்து 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என விதிகள் மாற்றப்பட்டன.
இத்தகைய சூழலில் தற்போது அந்த விதிகளைப் பின்பற்றாமல் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், புவியியல் எல்லை எதுவும் வரையறுக்கவில்லை. தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட புவியியல் எல்லையால் கேரளம், ஆந்திரா, கர்நாடகப் பகுதியினர் பொன்மலை, பெரம்பூர் ஐ.சி.எஃப் பணிமனைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இது தவிர அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகளும் இடம் பெற்றுள்ளன.
இத்தகைய விதிமீறல்களால், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் இருப்பதால், அப்ரன்டிஸ் நியமன தேர்வு அறிக்கையில் உள்ள விதிமீறலை சரிசெய்து புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.