சென்னை: பிஎல்எம் நிதி நிறுவன முறைகேடு வழக்கில் தமிழகம் மற்றும் கேரளாவில் 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் முடிவில், நிறுவனர் ஆர். பிரேம்குமார் தொடர்புடைய ரூ.103 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கியுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த ஆர்.பிரேம்குமார், பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி லிமிடெட் (பிஎல்எம்) நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவர் நிறுவனத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தைத் தனது சொந்த ஆதாயத்துக்குப் பயன்படுத்தியதாகப் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக கேரள காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருந்ததால், கேரள காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத் துறையும் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் கொச்சி மண்டல அமலாக்கத் துறை அதிகாரிகள் தமிழகம் மற்றும் கேரளாவில் பிரேம்குமார் தொடர்புடைய கொச்சி, கோழிக்கோடு, திருச்சூர், திருவனந்தபுரம், மன்னார்காடு, சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில், நிறுவனத்தின் பெயரில் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தைப் பிரேம்குமார் தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் சொத்துகள் வாங்குவதற்குப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரேம்குமார் சுமார் 320 வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி நிறுவனத்தின் நிதியைப் பல்வேறு வழிகளில் பரிவர்த்தனை செய்திருக்கிறார்.
இந்த வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், நிறுவனத்தின் பொதுமக்கள் நிதி தனிப்பட்ட ஆதாயத்துக்காகவும், அசையும், அசையா சொத்துகளை வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை அடமானம் வைத்து, பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு பெறப்பட்ட பணம், பிரேம்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் பெயர்களில் சொத்துகள் வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சோதனையின் போது, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டன.
அதன்படி, சுமார் ரூ.7.3 கோடி மதிப்பிலான 8 ஆடம்பர சொகுசு கார்கள், ரூ.9.6 கோடி மதிப்பிலான 7,400 கிராம் தங்க நகைகள், ரூ.80 கோடி மதிப்பிலான பங்குகள், ரூ.5 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், ரூ.1.86 கோடி வங்கி இருப்புத் தொகை என மொத்தம் ரூ.103 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகள் வாயிலாகப் பல நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், வங்கிக் கணக்குகள், சொத்து ஆவணங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த முறைகேடுகள் மூலம் மொத்தம் எவ்வளவு தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளது என்பதை கணக்கிடும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.