சென்னை: அன்பில் மகேஸ் வீட்டில் நடைபெறும் சோதனை மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தமிழகம் முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள், பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம், நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன்பு நடத்தும் போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு, ராமநாதபுரம் இரட்டைக் கொலை, சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை, அயனாவரத்தில் பெண் காவலரிடம் தவெக நிர்வாகி சீண்டல் என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்.
இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற தவெக அரசு.
இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சோதனை பின்னணி:
சென்னை சாலிகிராமத்தில் 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் பி.டி.அரசகுமார், தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, டிடிசிபி, சிம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி ஏமாற்றியதாக பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக திருச்சி தென்னூரில் உள்ள முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சோதனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.