காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி
சென்னை: மாமல்லபுரத்தில் காங்கிரஸ் கட்சி நிகழ்வில் பங்கேற்க ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார். இதையொட்டி, விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெறவுள்ள தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார். அதற்காக, டெல்லியில் இருந்து இன்று காலை காலை 7.15 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் புறப்படும் ராகுல் காந்தி, காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில், வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் ராகுல்காந்தி, இசிஆர் சாலை வழியாக மாமல்லபுரம் செல்கிறார். அங்கு நடக்கும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பயிற்சி முகாம் நிறைவு நாள் விழாவில் உரையாற்றுகிறார். விழா முடிந்ததும், மாமல்லபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டு மாலை 6 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வருகிறார். இரவு 7 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
முன்னதாக நேற்று ராகுல்காந்தி வருவதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. டெல்லியில் இருந்து வந்திருந்த சிஆர்பிஎப் அதிகாரிகள், தமிழக போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ராகுல் காந்தி வரும் போது, சென்னை விமான நிலையத்துக் குள், அவரை வரவேற்க எத்தனை நபர்களுக்கு அனுமதி பாஸ் வழங்குவது, சால்வை, பூங்கொத்து கொடுப்பதில் பாதுகாப்பு விதிகள் மீறப்படாமல் இருப்பது, பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்து கொள்வது போன்றவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராகுல் காந்தியின் இந்த பயணம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சம்பந்தப்பட்டது. கட்சியின் எதிர்கால வளர்ச்சி திட்டம்,கட்சியை பலப்படுத்துவது போன்றவைகளை குறித்த ஆலோசனை கூட்டம் ஆகும். ராகுல் காந்தியின் பயணத்திட்டத்தில், வேறு எந்த நிகழ்ச்சிகளும் இடம்பெறவில்லை” என்றார்.