சென்னை: “திமுகவில் 70 வயதை கடந்த மூத்த நிர்வாகிகளுக்கு வயது மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப தகுந்த பொறுப்புகள் மற்றும் பதவிகள் வழங்கப்படும். யாரையும் கட்சி ஒதுக்கவிடாது” என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கான தேதிகளை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வசதிக்கேற்ப விரைவில் முறைப்படி அறிவிப்பார்.
முழு ஒப்புதலுடன் தீர்மானம் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்த மூத்த முன்னோடிகள் மற்றும் பலமுறை ஒன்றிய செயலாளர்களாகப் பணியாற்றிய நிர்வாகிகள் அனைவரிடமும் கலந்தாலோசிக்கப்பட்டது.
அவர்களின் முழு மனப்பூர்வமான ஒப்புதல், வரவேற்புடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியினர் அனைவரும் அடிமட்ட அளவில் இருந்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதோடு, தங்களைச் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
அனுபவத்துக்கு ஏற்ப பதவி எல்லோரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். கட்சி அமைப்பில் 70 வயதைக் கடந்த மூத்த நிர்வாகிகள் யாரையும் கட்சி ஒதுக்கிவிடாது.
அவர்களது வயது, அனுபவத்துக்கு ஏற்ப தகுந்த பொறுப்புகள் மற்றும் பதவிகள் வழங்கப்படும். இளைஞர்களுக்குக் கட்சியில் அதிக அளவில் வாய்ப்பு அளிப்பதோடு, வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் உள்ளிட்ட அனைத்து ஆக்கப்
பூர்வமான பணிகளையும் விரைவுபடுத்தி எதிர்கொள்வதற்காகவே இந்த விதிமுறை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.