ராமநாதபுரம்: “மேகேதாட்டு அணை பிரச்சினையில் தற்போது தமிழக அரசு எடுக்கும் முயற்சி சரியில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை எடுத்து, மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்தார்.
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய மாற்றத்தை நோக்கி நடைபயணத்தை, ராமநாதபுரத்தில் இன்று கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ரா.முத்தரசன் தொடங்கி வைத்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறும்போது, “விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு எதிராக 3 மசோதாக்களை நிறைவேற்றினர். அதை திரும்ப பெற வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் போராடியும் எந்தப் பலனும் இல்லை.
நீட் நுழைவுத் தேர்வு கூடாது என தமிழகம் போராடி வருகிறது. இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டெல்லியில் போராடி இளைஞர்கள், மாணவர்களை தாக்கியதற்கு காரணமானவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் சட்டத்தை கைவிட வேண்டும். அதேசமயம் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை தற்போதுள்ள எண்ணிக்கையின்படி நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற வேண்டும்.
தமிழக பட்ஜெட்டில் திருமண பெண்களுக்கு 1 பவுன் தங்கம், பட்டுப் புடவை வழங்குவதை வரவேற்கிறோம். அதேநேரம் திருமணமாகும் அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்துக்கு வழங்கப்படும் பணத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது, நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழக அரசு வழக்கம்போல் ஜிகினா வேலைகளை செய்யாமல், ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய வேண்டும். காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500, புறநகர் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம், 5 ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு முழு கடன் தொகை தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளுக்கு பட்ஜெட்டில் பதில் இல்லை.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும்.
உதயநிதி பேசியதில் பிரச்சினை இல்லை. அதற்கு உதயநிதி மறுப்பு தெரிவிக்கவோ, மன்னிப்பு கேட்க வலியுறுத்தியிருக்கலாம். இதை விடுத்து கைது செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஆளுநர் மூலமாக பாஜக ஆட்சியை கைப்பற்ற முயற்சித்ததை தடுக்க தவெக அரசுக்கு ஆதரவு அளித்தோம். எந்தக் கூட்டணியிலும் நாங்கள் இல்லை.
மேகேதாட்டு அணை பிரச்சினையில் தற்போது தமிழக அரசு எடுக்கும் முயற்சி சரியில்லை. இந்தப் பிரச்சினையில் முன்னாள் முதல்வர்கள் 26 முறை பேசியும் எந்த வெற்றியும் எட்டப்படவில்லை. காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேகேதாட்டு அணை கட்டினால் 67 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தேக்கும். இதனால் தமிழகம் பாலைவனமாக மாறும். எனவே, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை எடுத்து, தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். எந்த அரசாக இருந்தாலும், மக்கள் பிரச்சினையை காது கொடுத்து கேட்டு தீர்க்க வேண்டும்” என்று முத்தரசன் கூறினார்.
இந்த நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் (பொ) என்.கே.ராஜன், ஏஐடியுசி மீனவர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் சி.ஆர்.செந்தில்வேல் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.