சென்னை: பாடல்களின் காப்புரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆதரவாக, இயக்குநர் ஆர்.கே. செல்வமணி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மியூசிக் மாஸ்டர் என்ற இசை வெளியீட்டு நிறுவனம் 2010-ல் வழக்கு தொடர்ந்தது. அதில், “இளையராஜா இசையமைத்த பாண்டியன், குணா, தேவர் மகன், பிரம்மா உள்ளிட்ட 109 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் அந்தப் படங்களின் இசை வெளியீட்டு உரிமையை, இளையராஜாவின் மனைவி ஜீவா நடத்தி வந்த இசை நிறுவனத்திடமிருந்து எங்களது நிறுவனம் பெற்றுள்ளது.
எனவே, எங்களது அனுமதியின்றி அந்தப் படத்தின் பாடல்களை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தது.
சமூக வலைதளங்கள்... இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், “1997-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்போது யூடியூப், சமூக வலைதளங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆடியோ ரிலீஸுக்கு மட்டுமே அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
இந்த வழக்கில் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஆஜராகி சாட்சியம் அளித்துள்ள நிலையில், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.செல்வமணி மாஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
ஜன. 20-க்கு தள்ளிவைப்பு: அப்போது அவர், “இளையராஜா தான் இசையமைத்துள்ள பாடல்களின் காப்புரிமையை என்றும் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியது இல்லை. அந்தப் பாடல்களின் காப்புரிமை இளையராஜாவிடம்தான் உள்ளது.
சம்பந்தப்பட்ட படத்தில் அந்தப் பாடல்களை பயன்படுத்துவதற்கான உரிமை மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று சாட்சியம் அளித்தார். அதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.