மதுரை: ஆள் பிடிக்கும் வேலையைத் தொடர்ந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தவெகவுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது; அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் அதிமுக. 90 சதவீதம் எங்களது தொண்டர்கள் தவெகவில் இணைவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். கேட்க நாதி இல்லை என்ற நிலையில் அவர் தொடர்ந்து பேசுகிறார்.
நம்பிக்கை இழந்து விட்டீர்களா?
உங்களது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களா. உங்கள் தலைவர் மீது நம்பிக்கை இழந்துள்ளீர்களா, எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமி வழி வந்த தொண்டர்களை கட்சியில் சேருங்கள் என பிச்சை எடுக்கும் வகையில் கூவி கூவி அழைக்கிறீர்களே?
விஜய்யின் மக்கள் செல்வாக்கு கேள்விக்குறி ஆகிவிட்டதா அல்லது அதை நிலை நிறுத்த அதிமுக தொண்டர்களே வாருங்கள் என, விலைபேசி பிச்சை எடுக்கிறீர்களா, இதற்கு விஜய் தடை போடவேண்டும்.
இந்த நாடகத்தை அவர் அனுமதிக்கிறாரா என்பதே எங்களது தொண்டர்களின் கேள்வியாக உள்ளது. அதிமுக தொண்டர்களை விலை பேசமுடியாது என்பதற்கு பல சான்றுகள், சாட்சிகள் உள்ளன.
எங்களைக் குறைத்து மதிப்பிடாதீர். அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் தோற்றுப் போய் உள்ளனர். அதிகார ஆசை காட்டி அமைச்சர் தொடர்ந்து கூவுகிறார். தேர்தலில் 34 சதவீதம் வாக்குகளைப் பெற்றாலும் மக்கள் நம்பிக்கை பெறாத கட்சி தவெக.
அதிகாரத்தால் முயற்சி செய்தாலும் அதிமுக தொண்டர்கள் உறுதியோடு உள்ளனர். 5 ஆண்டுகளில் எத்தனை கட்சிக்குச் சென்றவர் நீங்கள்.
அதிமுகவை அழிக்க முடியாது
தவெகவுக்கு முன்பு அதிமுகவில் சேர முயற்சித்தீர்கள். உங்களால் அதிமுகவை அழிக்கவே முடியாது.
யானை தனது தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டது போன்று உங்களது அழிவுக்கு முயற்சிக்கிறீர்கள். ஆட்கள் பிடிக்கும் வேலையைத் தொடர்ந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.