புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி - கோப்புப் படம்: நா.தங்கரத்தினம்.
பரபரப்பான அரசியல் சூழலில் புதிய தமிழகம் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நாளை (மார்ச் 5) நடைபெறவுள்ளது.
ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தலுக்கான தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், இந்த இரண்டு கட்சிகளுமே புதிய தமிழகம் கட்சியை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
புதிய தமிழகம் கட்சியானது தங்களுக்கு 10 தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா சீட்டையும் எதிர்பார்க்கிறது. ஆனால், திமுக தரப்பில் இரண்டு தொகுதிகள் கொடுத்து அவர்களை கூட்டணிக்குள் கொண்டுவர பேசி வருகிறார்கள். அதேசமயம், அதிமுக தரப்பில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் கோயம்புத்தூரில் நாளை (மார்ச் 5) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள 300-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், “தமிழக அரசியல் நிலவரம், யாருடன் கூட்டணி அமைப்பது, எத்தனை சீட்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டு யாருடன் கூட்டணி என்பதையும் தலைவர் முடிவு செய்வார்” என்றனர்.