தமிழகம்

திமுகவுடன் புதிய தமிழகம் பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரண்டு தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் எதிர்பார்ப்பதாக புதிய தமிழகம் கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி உருவாகும் நிலை உள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. திமுக தங்கள் தோழமை கட்சிகளுடன் கூட்டணியை வலுப்படுத்தி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது.

          

இதேபோல, அதிமுகவும் தங்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அன்புமணியின் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், இக்கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறுமா என கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் 10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கும் நிலையில், பேச்சுவார்த்தை இழுபறியாக உள்ளது.

இதற்கிடையில், திமுக கூட்டணியில் புதியதமிழகம் கட்சி இடம்பெற பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இது குறித்து, திமுக வட்டாரத்தில் கூறுகையில், "புதியதமிழகம் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறது. திமுக சின்னத்தில் போட்டியிட தெரிவித்தபோது, தனி சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை தொடர்கிறது" என்றனர்.

இது குறித்து, புதிய தமிழகம் கட்சி தரப்பில் கேட்டபோது," திமுக தரப்பில் எங்களை அணுகி உள்ளனர். தென் மாவட்டங்களில் எங்களுக்கென்று தனி ஓட்டு வங்கி உள்ளது. அதை தவறவிட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் திமுக உள்ளது.

இரண்டு தொகுதி, ஒரு ராஜ்ய சபா சீட் கொடுத்து எங்களை கூட்டணியில் சேர்க்க நினைக்கின்றனர். அதேநேரத்தில், அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை இழுபறி நிலையில் தான் உள்ளது. கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவது தொடர்பாக இரண்டு நாட்களில் ஒரு முடிவு கிடைத்துவிடும்" என்றனர்.

SCROLL FOR NEXT