படம்: எம்.சாம்ராஜ்

தமிழகம்

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: வெள்ளை அறிக்கை வெளியிட வைத்திலிங்கம் வலியுறுத்தல்

அ.முன்னடியான்

புதுச்சேரி: உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

அமைப்புச் சாரா தொழிலாளர் காங்கிரஸின் புதுச்சேரி தலைவராக பிரபுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அமைப்பின் புதுச்சேரி பொறுப்பாளருமான சக்தி சிவகுமார் இன்று புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தி வைத்தி வைத்தார். இதில் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வைத்திலிங்கம் எம்பி கலந்து கொண்டனார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தனக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக அடிக்கடி மாநில அந்தஸ்து பிரச்சினையைக் கையில் எடுக்கும் முதல்வர் ரங்கசாமி, மற்றவர்களுக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அதற்காகதான் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

இந்தத் தேர்தலின் வாயிலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவிக்கு வர முடியும். மேலும், புதுச்சேரியில் மாநில தேர்தல் ஆணையர் பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது. இதைத் தவிர சாதிவாரி கணக்கெடுப்புக்காக நியமிக்கப்பட்ட கமிஷன் அறிக்கை அளித்தும் அதை வெளியிடாமல் புதுச்சேரி அரசு இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. அதனால் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசு சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.

3 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட யூனியன் பிரதேசமாக இருக்கும் லடாக் பகுதியில் உயர் நீதிமன்ற கிளை அமைக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் 10 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட புதுச்சேரியில் உயர் நீதிமன்ற கிளையை அமைக்காமல் இருப்பது ஏன்? இதையெல்லாம் வலியுறுத்தும் வகையில் காங்கிரஸ் சார்பில் மாநாடு மற்றும் மிகப் பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT