புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் போலீஸார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மையம் உள்ள லாஸ்பேட்டை பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. வாகனங்கள் அப்பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை மையங்களினுள் 3 கட்ட சோதனைக்கு பிறகு முகவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். செல்போன் அனுமதியில்லாததால் அதனை பாதுகாக்க தனி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடந்தது. எஸ்ஐஆர் திருத்தத்தின்போது 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 9.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் 1099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் முதல் முறை வாக்காளர்கள் 24,919 பேர். இத்தேர்தலில் 294 பேர் 30 தொகுதிகளில் போட்டியிட்டனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் வரலாறு காணாத வகையில் 89.87 சதவீதம் வாக்குகள் பதிவானது. மேலும், இதுவரையில் பதிவான 12,936 தபால் வாக்குகளையும் சேர்த்தால் 91.23 சதவீதம் வாக்குகள் இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ளது.
வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 23 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, தாகூர் கலைக்கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல காரைக்கால் மாவட்டத்தில் 5 தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்திலும், மாஹேவில் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாமில் அரசு கலைக்கல்லுாரியிலும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. புதுவையில் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 166 டேபிள்களும், தபால் வாக்குளை எண்ணுவதற்கு 35 டேபிள்கள் என மொத்தம் 201 டேபிள்கள் போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 265 கண்காணிப்பாளர்கள், 315 உதவியாளர்கள், 279 பார்வையாளர்கள் என மொத்தம் 859 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுளள்னர்.
காலையில் முகவர்கள் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வந்தனர். அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அப்பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வேட்பாளர்களும் வந்தனர். மூன்று கட்ட சோதனைக்கு பிறகு முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போனுடன் மையங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. அவர்களிடம் இருந்து செல்போனை பாதுகாக்க தனியாக அறை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் முகவர் முன்னிலையில் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டுவரப்பட்டது.
முதல்கட்டமாக தபால் வாக்குகள் 8 மணிக்கு தொடங்குகிறது. 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 7 முதல் 14 வரை எண்ணிக்கை மேசைகள் ஒதுக்கப்படுகின்றன.
முதல் சுற்றாக மண்ணாடிப்பட்டு, ஊசுடு, வில்லியனுார், கதிர்காமம், தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, நிரவி திருபட்டினம், மாஹே, ஏனாம் ஆகிய 17 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இந்த 17 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை முடியும் நேரம் குறித்து தேர்தல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக மதியம் ஒரு மணிக்கு இந்த 17 தொகுதிகளின் முழுமையான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.