புதுச்சேரி: புதுச்சேரி - தட்டாஞ்சாவடி தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சியான என்.ஆர் காங்கிரஸ், தவெக கூட்டணியிலுள்ள நேயம் மக்கள் கழகம் மற்றும் திமுக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்த கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் அவர் 5-வது முறையாக அவர் முதல்வரானார். தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டிய சூழலில் இன்று இடைத்தேர்தலை அறிவித்தது.
அதன்படி வேட்புமனு தாக்கல் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. வரும் 16-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனு பரிசீலனை வரும் 17-ம் தேதியும், வரும் 19-ம் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாளாகும். வரும் அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் நடக்கும். வாக்கு எண்ணிக்கை வரும் அக்டோபர் 9-ல் நடக்கும்.
இத்தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் போட்டியிடுகிறார் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
அதேபோல் தவெக கூட்டணியில் உள்ள நேயம் மக்கள் கழகம் சார்பில் விநாயகம் போட்டியிடுகிறார். ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட எம்.பி-யும், மாநில காங்கிரஸ் தலைவருமான வைத்திலிங்கம் நான்காம் இடம் பிடித்திருந்தார்.
தேர்தலுக்கு பிறகு தற்போது தமிழகத்தில் தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு தருகிறது. அதனால் இம்முறை புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு ஆதரவு தருமா என்பது தொடர்பாக நிர்வாகிகள் விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதேபோல் இத்தொகுதியில் திமுகவும் களத்தில் இறங்குகிறது. இதன்மூலம் இத்தொகுதியில் மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது.
தட்டாஞ்சாவடி தொகுதி நிலவரம்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் 26,797 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் கடந்த 1974, 1977, 1980, 1985, 1990 ஆகிய ஆண்டுகளில் பெத்தபெருமாள் வென்றார்.
தட்டாஞ்சாவடியில் கடந்த 1990-ல் காங்கிரஸில் போட்டியிட்ட ரங்கசாமி தோல்வியடைந்தார். அதையடுத்து அப்பா பைத்தியசாமியை பார்த்த பிறகு அவர் மீண்டும் தேர்தலில் வெல்ல வாய்ப்புண்டு என்றார். அதையடுத்து ஓராண்டில் தேர்தல் வந்தது. அதையடுத்து தட்டாஞ்சாவடியில் 1991, 1996, 2001, 2006 தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றார். முதல்வராகவும் ஆனார்.
கடந்த 2011-ல் தனிக்கட்சியாக என்.ஆர் காங்கிரஸ் தொடங்கினார். அப்போது இத்தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், போட்டியிட்டு வென்றார். அவர் 2016-ம் ஆண்டும் வெற்றியடைந்தார்.
அதைத்தொடர்ந்து 2019-ல் திமுக வெங்கடேசன் வென்றார். பின்னர் 2021, 2026 தேர்தல்களிலும் ரங்கசாமி வென்றார். தற்போது ராஜினாமாவால் இடைத்தேர்தல் வருகிறது.