தமிழகம்

யார் தலைமையில் கூட்டணி? - புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் மல்லுக்கட்டு

செ.ஞானபிரகாஷ்

தமிழகத்தில் அதிகாரத்தில் பங்கு கேட்டு திமுக-வுக்கு காங்கிரஸார் ‘அன்புத் தொல்லை’ கொடுத்துக் கொண்டிருக்க, புதுச்சேரியிலோ இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பதில் திமுக - காங்கிரஸ் இடையே பலத்த போட்டி உருவாகி வருகிறது.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் தாங்களே கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என இரண்டு கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. அதற்காக, கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் திமுக-வும், திமுக போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸும் வேட்பாளர்களை நிறுத்த தகுதியான ‘தேர்தல் முகங்களை’ தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவிலும் நடைபெற்று வருகின்றன. இந்தத் தகவல்கள் அரசல் புரசலாக வெளியில் கசிந்து வருவதால் இரண்டு கட்சிக்குள்ளும் இப்போதே நீயா நானா யுத்தம் நடக்க ஆரம்பித்திருக்கிறது.

          

இந்த நிலையில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், “திமுக கடந்த முறை வெற்றிபெற்ற 6 தொகுதிகளையும், காங்கிரஸ் வெற்றி பெற்ற 2 தொகுதிகளையும் தவிர, மற்ற 22 தொகுதிகளும் இரு கட்சிகளுக்குமே பொதுவானவை. இதில் எந்தத் தொகுதியிலும், காங்கிரஸ் போட்டியிடும்" என்று சொல்லி இருக்கிறார். மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவாவோ, "கடந்த தேர்தலில் போட்டியிட்ட 13 தொகுதிகளில் மீண்டும் திமுக போட்டியிடும். அதுபோக இம்முறை கூடுதலாக 6 தொகுதிகளை கூட்டணியில் கேட்டுப் பெறுவோம்" என்கிறார்.

இதன் மூலம் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம் என்பதை திமுக வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது. கூட்டணிக்கு தலைமை ஏற்கும் விதமாக 19 தொகுதிகளில் போட்டியிடப் போவதையும் காங்கிரஸுக்கு மறைமுகமாக உணர்த்தி இருக்கிறது அந்தக் கட்சி.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்திடம் பேசினோம். "இதுபற்றியெல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது பேசுவோம். அந்த நேரத்தில் முடிவு எடுக்கலாம். எங்கள் கட்சி வளர்ச்சிக்காக நாங்கள் சில விஷயங்களைச் சொல்கிறோம். அவரும் (சிவா) அவர்களது கட்சி வளர்ச்சிக்காக சில கருத்துகளைச் சொல்கிறார். இதனால் கூட்டணிக்குள் பிரச்சினை ஏதும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை" என்றார்.

SCROLL FOR NEXT