மருந்து ஊழல், அரசியல் மோதல்கள் என அமர்க்களப்பட்டு வரும் புதுச்சேரி அரசியல் களத்தில், ஏஐ தொழில்நுட்பத்தை வைத்தும் தேசியக் கட்சிகள் எசப்பாட்டுப் பாடிக் கொண்டிருக்கின்றன.
இந்த ஏஐ பிரச்சாரத்தை ‘புதுச்சேரி தாத்தா’ என்ற கார்ட்டூன் மூலமாக முதலில் தொடங்கியது எதிர்க்கட்சியான காங்கிரஸ் தான். (மிகப் பழமையான கட்சி என்பதால் தாத்தாவை வைத்து தொடங்கி இருப்பார்கள் போலிருக்கிறது!) காந்தி சாயலில் இருந்தாலும் இளமைத் துள்ளலுடன் எகிடு தகிடாக புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசைப் போட்டுத் தாக்கும் இந்த ஏஐ தாத்தா, மாநிலத்தின் சாலைப் பிரச்சினை, நிர்வாக பிரச்சினை, மின்துறை தனியார்மயம், சட்டம் - ஒழுங்கு நிலவரம் என அனைத்தையும் வீடியோ க்ளிப்பிங் சகிதம் போட்டுத் தாக்குகிறார்.
“புதுச்சேரியில மருந்து மாத்திரை தான் போலியா இருக்குன்னா... ரோடும் போலியா இருக்கே. ஆனா பாருங்க, 14.86 லட்சம் செலவுல ரோடு பேட்ச் வொர்க் நடக்குது. ஆனா என்ன பிரயோஜனம்? மூணு மாசத்துக்குக்கூட தாங்காதே. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசுல வருசா வருசம் பட்டி டிங்கரிங் தான் பாக்குறாங்க. ஒழுங்கா ரோடு போட மாட்டேங்கிறாங்க. எப்படிப் போட முடியும்... அதான் 30 பர்சன்ட் கமிஷன் குடுக்கணுமாமே? மழைக் காலம்
வருது. இனிமே யாரும் மீன்பிடிக்க கடலு கண்மாய்க்கி போக வேண்டாம். புதுச்சேரி ரோட்லயே மீன் பிடிக்கிறதுக்காகத்தான் இத்தனை ஏற்பாடும் பண்ணிட்டு இருக்காங்க” என்று தாக்கும் தாத்தா, “புதுச்சேரி ஆல் ரோட்ஸ் ஆர் வெரி பேட் ப்ரோ’ என்று புரட்சித் தளபதி ஸ்டைலிலும் பொளந்து கட்டுகிறார்.
காங்கிரஸ் கட்சியினர் தாத்தாவின் இந்த ‘தகவல் ததும்பும்’ வீடியோக்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கியதை அடுத்து, ஆளும் கூட்டணியில் இருக்கும் பாஜக-வும் ‘தங்க மகள்’ என்ற ஏஐ சுட்டி மகளை உருவாக்கி அவர் மூலமாக காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
“பாட்டி வடை சுட்ட கதையக் கேள்விப் பட்ருப்போம்... ஆனா நம்ம புதுச்சேரியில தாத்தா ஒருத்தரு, வாயாலயே வடை சுட்டுட்டு இருக்காரு. எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிரா பல பொய்க் கருத்துகள சொல்லிட்டு இருக்காரு இந்த டுபாக்கூர் தாத்தா... ஏன் தாத்தா இப்படி பொய் சொல்லி ஊரை ஏமாத்துற” என்று வாரும் ‘தங்க மகள்’,புதுச்சேரி அரசின் சாதனைகளையும் பட்டியல் போடுகிறார்.
காங்கிரஸ் தாத்தாவின் தாக்குதலையும் அதற்கு தாமரைக் கட்சியின் தங்க மகள் தரும் பதிலடிகளையும் வஞ்சகமில்லாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் புதுச்சேரி மக்கள்.