புதுச்சேரி: பேரவைத் தலைவர் தேர்தல் நடத்தாவிட்டால், ஆளுநர் உரை, பட்ஜெட் தாக்கலில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பதை சிந்திப்போம் என புதுவை எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது: “புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருது நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது கண்டனத்துக்கு உரியது. முக்கிய நிகழ்ச்சி இது. காவல் துறையில் நடந்த நிகழ்வில் தமிழ்த்தாய் புறக்கணிக்கப்படுகிறது. இனியாவது இதுபோல் நடக்காது என டிஜிபி உத்தரவாதம் தரவேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை புதுச்சேரிக்கு தந்தவர், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி. இங்கு திமுக முதல்வராக பரூக் மரைக்காயர் இருந்தார். புதுச்சேரிக்கு தமிழ்த்தாய் வாழ்த்தாக பாரதிதாசன் பாடல் தேர்வானது. கடந்த 1972 ஆண்டு முதல், அரசாணை பிறப்பித்து நடைமுறைக்கு வந்தது.
வந்தேமாதரம் பாடக் கூடாது என சொல்லவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தர தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் வலியுறுத்துகிறோம். இது தொடர்பாக முதல்வரிடமும் தெரிவித்துள்ளோம்.
தேசியக்கொடியை அமித் ஷா அசைத்து கொடி பேரணியை தொடக்கி வைத்திருக்கக் கூடாது. தேசியக்கொடியை தூக்கிதான் பிடிக்கவேண்டும். தாழ்த்தி பிடிக்கக் கூடாது. அது பொருத்தமாக இல்லை” என்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்துவீர்களா என்று கேட்டதற்கு, “நாங்கள் சட்டப்பேரவையில் கலந்து கொள்வது கேள்விக்குறியாக உள்ளது. மக்களால் தேர்வான எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்படும் பேரவைத் தலைவர்தான் பேரவையை நடத்தவேண்டும்.
தற்காலிக பேரவைத் தலைவர் வைத்து நடத்துவதில் மாறுப்பட்ட கருத்து உண்டு. பேரவைத் தலைவர் தேர்தல் நடத்தாவிட்டால் இதை கலந்து கொள்வதா வேண்டாமா என கட்சித் தலைமையிடம் என பேசி முடிவு எடுப்போம். தேர்தல் நடத்தாமல் தற்காலிக பேரவைத்தலைவர் மூலம் துணைநிலை ஆளுநர் உரை, பட்ஜெட் தாக்கலின் போது பங்கேற்பதை சிந்திப்போம்.
பேரவைக்கு துணைநிலை ஆளுநர் வருகையின் போது அவரை தேர்வு செய்யப்பட்ட பேரவைத்தலைவர் அழைத்து வரவேண்டும். அவர் எம்எல்ஏக்களால் தேர்வானவராக இருக்கவேண்டும். நியமிக்கப்பட்ட பேரவைத்தலைவராக இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம்” என்றார்.