று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம்

 
தமிழகம்

“கொலைச்சேரி ஆனது புதுச்சேரி” - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “கொலைகள் அதிகரித்து புதுச்சேரி ‘கொலைச்சேரி’ ஆகிவிட்டது. நிர்வாகம் தேங்கிவிட்டது,” என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “சாதாரணமாக நடக்கும் வேலைகள் கூட நடப்பதில்லை. ஐஏஎஸ் அதிகாரியைப் பார்க்கச் சென்றால் முடிவதில்லை. ஆளுநர் அலுவலகத்திலோ, தலைமைச் செயலரிடமோ கூட்டத்தில் இருப்பார். எங்கள் பிரச்சினையை முதல்வர், அமைச்சர்களிடம் சொல்லச் சென்றால், அவர்களுக்கும் இதே நிலை. நிர்வாகம் தேங்கியுள்ளது. தீபாவளி பொருட்கள்கூட சரியாகத் தரவில்லை.

தற்போதும் ரேஷனில் வரிசையில் நிற்கிறார்கள். குடிநீர் பிரச்சினையும் அதிகரித்துள்ளது. குப்பை அள்ளுவோருக்கு தீபாவளி போனஸ் தராததால் வேலைநிறுத்தம் செய்தனர். அரசு மருத்துவமனைகளில் அரசு அனுமதி பெற்ற 120 நர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான கோப்பு எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.

அதிகாரிகள், ஆளுநர், முதல்வர் ஒவ்வொரு வரிசையிலும் செல்கிறார்கள். டபுள் என்ஜின் என்று பார்த்தால் மோசமான நிர்வாகமாகிவிட்டது. தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு, வீடு கட்ட அனுமதி எதுவும் அரசு அனுமதியால் பெறமுடியவில்லை. மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு இல்லாததால் அவர்களும் மகிழ்வுடன் இல்லை.

புதுச்சேரி கொலைகள் நகரமாகி தற்போது கொலைச்சேரி ஆகிவிட்டது. டிஜிபி, டிஜஜி, எஸ்எஸ்பிக்கள், எஸ்பிக்கள் என இவ்வளவு பேர் இருந்தும் தமிழகத்தைப்போல் கொலைகள் அதிகரித்து விட்டன.

வெளியே நடமாட பயமாக இருக்கிறது. கஞ்சாவும் முக்கியக் காரணம். போலீஸ் அதிகாரிகள் எண்ணிக்கைதான் அதிகம். சரியான வேலை பார்த்திருந்தால் இதுபோல் கொலைகள் நடந்திருக்காது.

ஊதியமும் சரியாக தரப்படுவதில்லை. மாநிலம் மோசமாகியுள்ளது. விரைவில்  திமுக தலைவரை சந்திப்போம். நாடாளுமன்றம் கூடும் போது திமுக எம்பிக்கள் மாநில அந்தஸ்து கோருவோம். இந்த விவகாரத்தை திமுக கையில் எடுக்கும்,” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT