இது தேர்தல் பொங்கல்.. தேர்தல் நெருங்க நெருங்க, வரும் வாய்ப்புகளையெல்லாம் அரசியல் கட்சிகளும் அரசுகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவே காய்களை நகர்த்து கின்றன. பொங்கல் தொகுப்புடன் பரிசுத்தொகையாக தமிழகத்தில் அதிமுக ரூ. 5 ஆயிரமும் பாஜக ரூ. 8 ஆயிரமும் தர திமுக அரசி டம் கோரின.
ரூ. 3 ஆயிரம் ரொக்கம் என திமுக அரசு அறிவித்து வழங்கி வருகிறது. இத்தொகை போதவில்லை என எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழகத்தில் குற்றம்சாட்டும் பாஜக புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறது.
தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியில் பொங்கலை யொட்டி ரேஷனில் வழங்கும் பரிசுப் பொருட்கள் தொகுப்பில் பச்சரிசி, நெய், பருப்பு உள்ளிட்ட ரூ. 750 மதிப்புள்ள 5 வகை பொருட்கள் விநியோகம் சில தொகுதி களில் மட்டும் தொடங்கியுள்ளது. இதர தொகுதிகளில் விரைவில் தரப்படும் என்கின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியிலும் இந்த பொங்கல் தொகுப்புடன் ரொக்க பரிசுத் தொகை கண்டிப்பாக தரப்படும் என பாஜக தெரிவித்தது. அதைத்தொடர்ந்து பல நாட்களாகியும் முதல்வர் ரங்கசாமி மவுனம் காத்தார்.
அதிமுக, பாஜக தரப்பில் ரூ. 5 ஆயிரம் பரிசுத் தொகை தர கோரினர். காங்கிரஸோ ரூ. 10 ஆயிரம் தர வலியுறுத்தியுள்ளது. ஆனால், போதிய நிதி இல்லாததால் பொங்கல் பரிசுத்தொகை தருவதில் சிக்கல் நிலவுகிறது. தற்போதைய நிலையென்ன என்பது பற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒவ்வொரு அரசு துறைகளிலும் கையிருப்பு நிதி விவரத்தை முதல்வர் ரங்கசாமி சேகரித்தார்.
அதைக் கொண்டு இதற்கான செலவினத்தை ஈடுகட்ட நினைத்தார். அதிமுக, பாஜக கோரிக்கைப்படி ரூ. 5 ஆயிரம் தந்தால் மொத்தமுள்ள 3.47 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ. 170 கோடி தேவை. நிதித்துறை அதிகாரிகளோ போதிய நிதி இல்லை என கைவிரிக்கின்றனர். மத்திய அரசின் உதவியை நாட துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆலோசனை தந்துள்ளார்.
இதற்கிடையே புதுச்சேரிக் கான திருத்திய பட்ஜெட் ரூ.14,100 கோடி மத்திய உள் துறை அமைச்சக ஒப்புதலுக்கு சென்றுள்ளது. இந்த ச் சூழலில் பொங்கல் பரிசுத் தொகைக்காக ரூ. 170 கோடியை பெற மத்திய அரசின் உதவியை புதுச்சேரி அரசு நாடியுள்ளது.
அதைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் போனில் பேசிய முதல்வர் ரங்கசாமி பொங்கல் பரிசுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரியிருக்கிறார். கூடுதல் நிதி தொடர்பான கோப்புடன் அமைச்சர் லட்சுமி நாராயணன் சென்று மத்திய நிதி அமைச்சரை சந்தித்துள்ளார். அப்போது திருத்திய பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.140 கோடி (முதலில் கேட்டது ரூ.170 கோடி) தர கோரியுள்ளார்.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் ரேஷன்கார்டுக்கு ரூ. 4 ஆயிரம் வரை தர வாய்ப்புள்ளது" என் கின்றனர். தேர்தல் நேரம் என்பதால் புதுச்சேரிக்கு அடுத்தடுத்து டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர்கள் வரிசைக்கட்டி வந்து கொண்டிருக்கின்றனர். பிரதமரும் விரைவில் வர இருக்கிறார்.
மீண்டும் என்டிஏ கூட்டணியை புதுச்சேரியில் தக்க வைக்க ரங்கசாமி கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா..? திருப்தியான ஒரு பொங்கல் பரிசுத் தொகை புதுச்சேரி மக்களுக்கு கிடைக்குமா..? மத்திய அரசின் அனுமதியை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஓரிரு நாட்களில் இதற்கான விடை தெரிந்து விடும்.