தமிழகம்

‘சாத்தனூர் அணையில் இருந்து குழாய்களில் குடிநீரை எடுத்து வர அனுமதி தேவை’ - புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

முதல்வர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்

செ.ஞானபிரகாஷ்

கோவளம்: சாத்தனூர் அணையில் இருந்து புதுச்சேரிக்கு குடிநீர் எடுத்து வர பிரத்யேக குழாய் பாதையை அமைக்க மததிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். குஜராத்தில் செயல்படுத்திய திட்டத்தைப் போல் இங்கு இதை செயல்படுத்த வேண்டும் என்று தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.

தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆற்றிய உரை தொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

‘சொந்தமாக மேற்பரப்பு நீர் ஆதாரங்கள் இல்லாத புதுச்சேரி யூனியன் பிரதேசம், தனது முழுத் தேவைக்கும் நிலத்தடி நீரையே நம்பியுள்ளது. சில பகுதிகளில் டிடிஎஸ் அளவு 3,000-க்கும் அதிகமாக உள்ளது. இரும்பு மற்றும் நைட்ரேட் அளவுகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன. ஆண்டு முழுவதும் நிலையான நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, ஒருங்கிணைந்த மேற்பரப்பு நீர் ஆதார அமைப்பை உருவாக்குவதே எங்கள் தொலைநோக்குத் திட்டமாகும் இதற்கு அண்டை மாநிலங்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டின் ஆதரவு மிகவும் அவசியமானதாகும்.

முதலாவதாக, சங்கராபரணி மற்றும் தென்பெண்ணையாறு நதிகளை, முன்மொழியப்பட்ட கோதாவரி இணைப்புத் திட்டத்துடன் இணைப்பது பற்றியது. குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்காகக் கூடுதலாகத் தேவைப்படும் 5.55 டி.எம்.சி நீரை, இத்திட்டத்தின் முதல் கட்டத்திலேயே பரிசீலிக்க வேண்டும். தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் கால்வாய் கட்டமைப்பில், புதுச்சேரியின் முன்மொழியப்பட்ட இணைப்புத் திட்டங்களையும் சேர்க்க வேண்டும்.

இரண்டாவதாக, 1910-ம் ஆண்டிலேயே அப்போதைய சென்னை மாகாணத்தின் சார்பாக பிரிட்டிஷ் அரசுக்கும் புதுச்சேரி அரசுக்கும் இடையே சாத்தனூர் அணையில் இருநது நீர் திறப்பது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் பின்னர் 1969, 1976 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது.

இது பருவமழைக் காலத்தில் இரண்டு மாதங்களுக்கு மட்டும் சொர்ணாவூர் அணையில் இருந்து பங்காரு கால்வாய் வழியாகக் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் நீர் திறப்பதை உறுதி செய்கிறது. நீர் வீணாவதைத் தவிர்க்கும் வகையில், குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய சாத்தனூர் அணையில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு பிரத்யேகக் குழாய் பாதையை அமைக்க புதுச்சேரி அரசை அனுமதிக்க வேண்டும் என்பது எங்கள் பரிந்துரையாகும்.

குஜராத்தில் 1,000 கி.மீ நீளமுள்ள குழாய் பாதை திட்டத்தைச் செயல்படுத்திய குழுவில் நானும் ஒருவனாக இருந்தேன். எனவே மத்திய அரசு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு கூட்டுப் பணிக்குழுவை இதற்காக அமைக்க வேண்டும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வழியாகச் செல்லும் பெண்ணையாறு மற்றும் சங்கராபரணி ஆகிய ஆறுகளை ஒன்றோடொன்று இணைப்பது குறித்தும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். குடிநீர், பாசனம் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல் ஆகிய நோக்கங்களுக்காக, பெண்ணையாற்றில் இருந்து வரும் உபரி பருவமழை நீரைச் சங்கராபரணிக்கும் அங்கிருந்து ஏரிகளுக்கும் திருப்பி விடலாம்.

தமிழ்நாடு, கேரளம் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகள் வெளிப்படுத்திய ஆதரவு, ஒத்துழைப்பு மற்றும் புரிதல் ஆகியவை 'கூட்டுறவு கூட்டாட்சி' என்பதன் உண்மையான சாராம்சமாகும்’ என்று ஆளுநர் உரையின் விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்டிஏ உதவியோடு காவிரி நீரைச் சேமிக்க திட்டம்-

“புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் பகுதிக்கு ஆண்டுதோறும் 7 டி.எம்.சி காவிரி நீர் பெற உரிமை உள்ளது. காவிரிப் படுகையின் கடைமடைப் பகுதியாக காரைக்கால் விளங்குகிறது. பெரும்பாலும், பருவமழைக் காலத்தில் மட்டுமே எங்களுக்கு இவ்வளவு அளவு நீர் கிடைக்கிறது. பருவமழைக் காலத்தில் கிடைக்கும் உபரி காவிரி நீரைச் சேமிப்பதற்காக, காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) உதவியுடன் புதுச்சேரி அரசு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது.

மேற்பரப்பு சேமிப்புடன் கூடுதலாக, உபரி காவிரி நீரைப் பயன்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். முக்கியமான இச்சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் மறுவூட்டல் திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான தொழில்நுட்ப, நிர்வாக மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு தர வேண்டும்” என்றும் இம்மாநாட்டில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT