தமிழகம்

புதுச்சேரி கலால் துறையின் வருவாய் ரூ.1,733 கோடி: ஆர்டிஐ தகவல்

5 ஆண்டுகளில் ரூ.637 கோடி உயர்வு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் கலால் துறை வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.1,733 கோடியானது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 637 கோடி அதிகரித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் இது தெரிய வந்துள்ளது.

புதுச்சேரி குயவர்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக் ராஜா கலால் துறையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் (ஆர்டிஐ) பல கேள்விகளை எழுப்பியிருந்தார். குறிப்பாக, புதுச்சேரியில் 2021 முதல் 2026 வரை எத்தனை ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி தரப்பட்டது? வருவாய் எவ்வளவு? அதில் கலால் துறைக்கு எவ்வளவு வந்துள்ளது? ரெஸ்டோ பாருக்கு வரி எவ்வளவு? என்ற கேள்விகளை கேட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து கலால் துறை தகவல் தொடர்பு அலுவலர் சத்யநாராயணன் அளித்துள்ள தகவல்: புதுச்சேரி கலால் சட்டம் விதிகளின்படி ரெஸ்டோ பார் உரிமம் என்ற பெயரில் எந்த பிரிவோ உரிமமோ தரப்படவில்லை. உணவு சேவை தரும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு தங்களது வளாகத்தில் மதுபானம் தர சுற்றுலா பிரிவின் கீழ் எப்எல் 2 உரிமம் தரப்படுகிறது. 2021 முதல் 26 வரை சுற்றுலாபிரிவு எப்எல்2 உரிமங்கள் 194 தரப்பட்டுள்ளன. இக்காலத்தில் புதிய மொத்த விற்பனை மதுபான உரிமம் தரவில்லை.

கலால் துறை வருவாய் கடந்த 2021-22ல் ரூ. 1096 கோடியாக இருந்தது. இது 2022-23-ல் ரூ. 1402.61 கோடியானது. 2023-24ல் ரூ. 1487.66 கோடி. 2024-25ல் ரூ. 1538.81 கோடி. 2025-26ல் ரூ. 1733.5 கோடியானது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 637 கோடி உயர்ந்துள்து.

பள்ளிகள், மதவழிபாட்டு தலங்கள் அருகில் எத்தனை ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி தரப்பட்டதாக கேட்கிறீர்கள். இந்த விதியில் குறிப்பிட்டப்பட்டுள்ள தொலைவு சார்ந்த கட்டுப்பாடுகள் சுற்றுலா பிரிவின் கீழ் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு தரப்படும் பார் உரிமங்களுக்கு பொருந்தாது. எப்எல்2 உரிமத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு கட்டணம் ரூ. 7 லட்சம். எப்எல்2 உரிமத்துக்கான அனுமதிக்கப்பட்ட வேலை நேரம் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT