புதுச்சேரி: சமூக வலைதள கணக்குகளை நிர்வாகிகள் தொடங்குவது கட்டாயம் என புதுச்சேரி திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகத்தில், மாநில திமுக அமைப்பாளர் சிவா முன்னிலையில் நடைபெற்றது. மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள் விவரம்: புதுச்சேரி ஆளுங்கட்சியின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து, ஒவ்வொரு தொகுதியிலும் இளைஞரணி நிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், இளைஞரணி நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் கட்டாயம் கணக்குகள் தொடங்கி செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.