புதுச்சேரி: புதுவையில் இண்டியா கூட்டணி பிரச்சினை நாளைக்குள் சரியாகிவிடும் என்று திமுக மாநில அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸார் வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி சென்றுள்ளனர்.
புதுச்சேரியில் ஆளும் கட்சி கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இடையே 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
கூட்டணி தலைமை, கூடுதல் தொகுதியில் போட்டி என்பதில் காங்கிரஸ், திமுக இரு கட்சிகளும் பிடிவாதமாக உள்ளன. புதுவை தொகுதி பங்கீடை முடிவு செய்ய காங்கிரஸ், திமுக தலைமைகள் பேசி முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களும் இதுவரை பேசவில்லை.
இந்த நிலையில் புதுவையில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுவை தேர்தல் பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், அஞ்சலி நிமல்கர் ஆகியோர் சென்றுள்ளனர்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் ஆகியோருடன் இன்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தொடர்ந்து திமுக தலைமையை தொடர்புகொண்டு, தொகுதி எண்ணிக்கை, தொகுதியையும் முடிவு செய்கின்றனர். தொகுதி உடன்பாடு, வேட்பாளர் அறிவிப்பு இன்று இரவே வெளியாகும் என தெரிகிறது.
திமுக தரப்பில் நிலைப்பாடு தொடர்பாக புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் காட்டியுள்ள கூட்டணி தான் எங்களுக்கு. அவர் வழிதான் எங்களுக்கு. தனியாக வழி ஏதும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக அதே கூட்டணிதான். இழுபறிக்கு காரணம் எங்கள் இருவருக்கும் உள்ள கோரிக்கைகள்தான்.
பேசி தான் தீர்க்க முடியும். நாளைக்குள் எல்லாம் இறுதியாகிவிடும். கூட்டணிக்கு தலைமை திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் ராகுலும் தான். காங்கிரஸார் கோரிக்கைகளை சொல்லிவிட்டனர். தலைவர் சீக்கிரம் கூட்டணி பிரச்சினையை முடித்து விடுவார். அவரவர் ராசி தகுந்தாற்போல், நேரம் தகுந்தாற்போல் வேட்பு மனுதாக்கல் செய்கிறார்கள்.
தமிழக முதல்வர் முன் மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்றி உள்ளார். அவரது தொண்டர்கள் அச்சாயலை புதுச்சேரிக்கு கொண்டு வருவார்கள். 30 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சில சமிக்ஞைகள் கொடுத்துள்ளோம். அதன்படி மனுதாக்கல் செய்கிறார்கள். தொகுதி பங்கீடுக்கு பிறகு காங்கிரஸார் தொகுதிகளில் மனு தாக்கல் செய்திருந்தால் வாபஸ் வாங்குவீர்களா என்று கேட்கிறீர்கள். எங்கள் தலைவர் சொல்வதைச் செய்வோம்” என்று திமுக மாநில அமைப்பாளர் சிவா கூறினார்.