ராஜவேலு, சிவக்கொழுந்து. ஜிஎன்எஸ்.ராஜசேகரன்.
புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவையில், மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. வருகிற 17-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. கடந்த மே 13-ம்தேதி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். இதைத் தொடர்ந்து அமைச்சர்களாக பாஜக நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரஸ் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவியேற்றனர். மீதமுள்ள 3 அமைச்சர்கள் பதவிகள் குறித்து கடந்த 3-ம் தேதி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, பட்டியலை வழங்கினார்.
இதில் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் (பாஜக), ராஜவேலு, சிவகொழுந்து (என்ஆர். காங்கிரஸ்) ஆகியோரை அமைச்சராக்க பரிந்துரைத்திருந்தார். யூனியன் பிரதேச விதிமுறைப்படி, அந்தக் கடிதத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு அனுமதி கிடைத்தவுடன் கடந்த 7-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனுமதி| கிடைக்காததால் விழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் புதிய அமைச்சர்களாக ராஜவேலு, ராஜசேகரன், சிவக்கொழுந்து ஆகியோரை நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தற்போது அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து வருகிற 17-ம் தேதி 3 புதிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.