புதுச்சேரி: தமிழக முதல்வர் விஜய் படத்தை பெரிதாகவும், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா படங்களை சிறிதாகவும் அச்சிட்ட பதாகையுடன் புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
புதுச்சேரி நேயம் மக்கள் கட்சியானது தவெகவுடன் சட்டப்பேரவைத் தேர்தலில் முதலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் தட்டாஞ்சாவடி தொகுதியில் நேயம் மக்கள் கட்சியின் பொதுச்செயலராக இருந்த விநாயகம் போட்டியிட்டு தோல்விடைந்தார். அவர் இம்முறை மீண்டும் போட்டியிட திட்டமிட்டார். பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து விநாயகம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனிடையே, காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு தவெக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று லட்சுமி நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விநாயகம் வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, வேட்பாளர் விநாயகத்துடன் வந்த நபர்கள் கையில் பெரிய அளவில் பதாகை பிடித்து இருந்தனர். அந்தப் பதாகையில் தமிழக முதல்வர் விஜய் படம் பெரிய அளவில் இருந்தது.
அதே நேரத்தில் சிறிய அளவில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் படம் இருந்தது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர், தனது கட்சியின் தலைவர்களின் படங்களை விட தவெக தலைவரின் படத்துக்கு முன்னுரிமை தந்ததை காங்கிரஸார் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.