ஜான்குமார் | கோப்புப் படம்

 
தமிழகம்

“வெற்றி பெறாவிட்டால் நாட்டை விட்டே செல்வேன்” - புதுச்சேரி பாஜக வேட்பாளர் ஜான்குமார் ஆவேசம்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “தேர்தலில் வெல்வேன். வெற்றி பெறாவிட்டால் இந்தியாவை விட்டே செல்வேன். நாட்டிலேயே இருக்க மாட்டேன்” என புதுச்சேரி பாஜக வேட்பாளர் ஜான்குமார் தெரிவித்தார்.

புதுச்சேரி பாஜகவினர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் கூறும்போது, “இண்டியா கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி. மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு கூட்டணி என்பார்கள். பிரதமர் மோடியை நீக்கவே இந்தக் கூட்டணி அமைத்தனர். இவர்களுக்கு கொள்கையே இல்லை. இது புதுச்சேரியில் நன்றாக தெரிகிறது. யார் தலைமை நாற்காலியில் அமர்வது என்ற போட்டியால் காங்கிரஸ், திமுக எதிர் எதிராக போட்டியிடுகின்றன.

          

நிலையான ஆட்சியை கடந்த ஐந்து ஆண்டுகள் என்டிஏ கூட்டணி அளித்தது. பதவிக்காக தான் இண்டியா கூட்டணிக்கே வந்தனர். குழப்பமான தலைமையில் இண்டியா கூட்டணி உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. டெல்லிக்கு எதிரான ஆட்சி அமைந்தால் புதுச்சேரிக்கு கேடு என்பதை மக்கள் அறிந்துள்ளனர். ஏப்ரல் 3-ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வரும்போது சில நல்லவற்றை சொல்வார்” என்றார்.

அப்போது பாஜக வேட்பாளர் அமைச்சர் ஜான்குமார் கூறும்போது, “திமுக வேட்பாளர் தோல்வி பயத்தில், நான் வியாபாரி, காமராஜர் நகர் தொகுதியிலிருந்து இங்கு போட்டியிடுவதற்கு, தொகுதியை விற்று வந்ததாக குற்றம் சாட்டுகிறார்.

நான் இந்தத் தேர்தலில் வெல்லாவிட்டால் இந்தியாவை விட்டே செல்வேன். நாட்டிலேயே இருக்க மாட்டேன். நான் வியாபாரி. தொகுதியை விற்று வந்தார் என்பார்கள். எல்லாவற்றுக்கும் தேர்தல் முடிவில் மே 4-ம் தேதி தெரியவரும்.

தோற்றால் தேர்தலில் நிற்கமாட்டேன் என சொல்லும் தைரியம் திமுக வேட்பாளருக்கு உள்ளதா? முதல்வர் ரங்கசாமி என் தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வருவார். மீண்டும் முதல்வர் ரங்கசாமிதான் என அமித் ஷா சொல்லி உள்ளார். அது எழுதப்பட்ட விதி. ஆன்மிக சுற்றுலாவுக்கு ரங்கசாமி சென்று வந்ததால்தான், தற்போது உள்ளவை நடக்கிறது. எனக்கு அமைச்சர் பதவி தந்தால் ஏற்பேன். நானாக கேட்க மாட்டேன்” என்றார்.

SCROLL FOR NEXT