புதுச்சேரி: ‘தீவிரவாத கும்பலுடன் சேர்ந்து போராட்டங்களை நடத்தி அதன் மூலம் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கனவு காண்கிறார்’ என்று புதுச்சேரி பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் வெற்றிபெற முடியாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தொடர்ந்து வெற்றி பெறுவதில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் எனவும் தவறான குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார்.
இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கூறி வருகிறார். நாட்டின் ஜனநாயக முறையில் வெற்றி பெற முடியாது. நம்மை பிரதமராக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை நன்றாக உணர்ந்த ராகுல் காந்தி, தீவிரவாத கும்பலுடன் சேர்ந்து போராட்டங்களை செய்து, அதன்மூலம் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கனவு காண்கிறார்.
பிரதமர் போல் இரும்புக்கரம் கொண்ட தேசத் தலைவர் இருக்கும் இந்த நாட்டில் அதுபோன்ற நிகழ்வு ஒருபோதும் நடக்காது. ராகுல் காந்தி எந்தவித அறிவு முதிர்ச்சியும் இல்லாமல் மோசமான தீய நோக்கத்தோடு இந்தியாவின் சிறப்புத்தன்மையை உடைக்க முயற்சிக்கிறார்.
எஸ்ஐஆர் நடைமுறை புதுமையான நிகழ்வு அல்ல. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நடைமுறையில் இருக்கிறது. வெவ்வேறு பெயர்களில் இந்த நடைமுறை இருந்து வந்தது. தற்போது 20 ஆணடுகளுக்கு பிறகு எஸ்ஐஆர் என்ற பெயரில் நடைமுறைபடுத்தப்படுகிறது.
புதுச்சேரியில் எத்தனை பேர் வாக்கு இல்லை என்று போராட்டத்தில் குதித்தார்கள்? ஒருவர் கூட தங்களின் வாக்கு விடுபட்டுவிட்டதாக குற்றம்சாட்டவில்லை. தமிழகத்தில் திமுக எஸ்ஐஆர் நடைமுறையை மேற்கொண்டனர். அவர்கள் தங்களின் அரசியல் வாழ்வுக்காக, விஜய்யை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எஸ்ஐஆர் சரியில்லை என்கிறார்கள்.
தமிழகத்தில் பாஜக 27 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றது. அதனை வரவேற்று அடுத்தகட்ட பணியை செய்கின்றோம். எந்த வாக்கு இயந்திரத்தில் வாக்காளித்தாலும் தாமரைக்கு தான் விழுகிறது என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.
அப்படியானால் நானோ, முன்னாள் சட்டப்பேரவை தலைவரோ ஏன் தோல்வியடைய போகிறோம்? வாதத்துக்கு ஒவ்வாதவற்றை வைத்துக்கொண்டு உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனர். இந்தியா 7.8 ஜிடிபி பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக இருக்கிறது.
உலகில் வேறு எந்த பொருளாதாரமும் இப்படி இல்லை. அமெரிக்காவை ஆளும் தகுதி பிரதமர் மோடிக்கு தான் இருக்கிறது என்று அந்நாட்டு தொழிலதிபர் ஒருவர் கூறுகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட பயந்து நம்மோடு அனுசரணையாக இருக்க முயற்சிக்கிறார்.
பாரத ரத்னாவுடன் ஒப்பிடத்தக்க உயர்ந்த விருதுகளை 37 நாடுகளில் பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். பிரிவு 356-ஐ (Article 356) பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட தனக்கு உடன்படாத ஆட்சிகளை கலைத்திருக்கிறார்கள். கடந்த ஆட்சி வரை உடனிருந்த திமுக ஆட்சியைக் கூட கலைத்துள்ளனர். ஆனால் பாஜக பதவியேற்ற பிறகு ஒரு ஆட்சி கலைப்பு நிகழ்வு கூட நடந்தது இல்லை. அனைத்து பகுதிகளிலும் ஜனநாயக முறைப்படித்தான் தேர்தல்கள் நடத்தப்படுகிறது.
கரப்பான்பூச்சி கட்சி நாட்டை துண்டாடுவோம் என்று பேசிய உரையாடல் கூட வெளியே வந்துள்ளது. இது போன்றவர்களுடன் கைகோத்துள்ளவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்” என்று வி.பி.ராமலிங்கம் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர், “வரும் அக்.31-ம் தேதி ஜனநாயகத்தை காப்போம், கும்பல் ஆதிக்கத்தை அகற்றுவோம் என்ற பெயரில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் பேரணியை ஒன்றை பாஜக சார்பில் நடத்த உள்ளது” என்றார்.