புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிக தலைவர் அன்பழகன்

 
தமிழகம்

ஆக.31 வரை புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம்: தற்காலிக தலைவர் அறிவிப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மதியம் முதல்வர் ரங்கசாமி 2026- 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதற்கிடையே பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

பின்னர் சட்டப்பேரவையின் தற்காலிகத் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியது: “வருகிற 31-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துவது என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாளை (ஆக. 25) மற்றும் வரும் 27, 28, 29 ஆகிய நாட்களில் துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பட்ஜெட் மீதான விவாதம், பொது விவாதம், முதல்வர், அமைச்சர்கள் பதில் உள்ளிட்டவை இந்த 6 நாட்களில் இருக்கும். 26-ம் தேதி (புதன்கிழமை) அரசு விடுமுறை தினம் என்பதால் அமர்வு கிடையாது.

30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அமர்வு இல்லை. 31-ம் தேதி நிதி ஒதுக்க சட்ட முன்வரைவு முன்மொழிதல், ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல் நடைபெறும். இந்த நாட்களில் கேள்வி - பதில் இல்லை. 31-ம் தேதிக்கு பிறகு 12 நாட்கள் கழித்து கேள்வி - பதில்களுடன் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்படும்.

இந்த கூட்டத்தொடர் ஜனநாயகத்தின் அடிப்படையில் விரிவாக நடத்தப்படும். புதிய உறுப்பினர்கள் பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு பேச்சுரிமை அளிக்கும் வகையில் இந்த கூட்டத்தொடர் அமையும்” என்று தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள், ‘திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தனி தீர்மானம் நிறைவேற்ற என்றும் மனு அளித்துள்ளார். அது தீர்மானமாக நிறைவேற்றப்படுமா?’ என்று கேட்டபோது, அதற்கு பேரவையின் தற்காலிகத் தலைவர், “முதல்வரின் கருத்தை அறிந்தபிறகே பதில் கூறப்படும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT