புதுச்சேரி: பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.5,000 வழங்க புதுச்சேரி அரசை வலியுறுத்தி என்டிஏ கூட்டணியிலுள்ள அதிமுக சார்பில் இன்று பொங்கல் பானையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் பொங்கல் உதவி தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் பொங்கல் உதவித் தொகை ரூபாய் 3,500 வழங்குவதற்காக கோப்புகளை தயாரிப்பு செய்து, ஆளுநருக்கு ரங்கசாமி நேற்று இரவு அனுப்பி வைத்துள்ளார்.
இதனிடையே, பொங்கல் பரிசுத் தொகையை ரூ.5,000- ஆக உயர்த்தி வழங்க புதுச்சேரி அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுகவினர் கையில் பொங்கல் பானைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளும் அரசுக்கு எதிராக ரூ.5,000 வழங்கக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன் கூறுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசாக இருந்தாலும் பண்டிகை கால நலத்திட்ட உதவிகளை காலத்தோடு வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 5,000 பொங்கல் சிறப்பு நிதியாக வழங்க வேண்டும் என கடந்த 10 தினங்களுக்கு முன்பே அதிமுக சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம்.
இது சம்பந்தமாக துணை நிலை ஆளுநர், தலைமைச் செயலாளர், நிதிச்செயலர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் அதிகார வர்க்கங்கள் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்க வேண்டிய உதவித் தொகையை வழங்கும் அறிவிப்பைக் கூட முதல்வரால் காலத்தோடு அறிவிக்க முடியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே ஆளும் அரசுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் ஒத்துப்போகாத பனிப்போர் நிலவி வருகிறது. பொங்கல் பரிசுத் தொகை ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5,000 ரூபாய் வழங்க போதிய நிதியுதவியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று அன்பழகன் வலியுறுத்தினார்.