தமிழகம்

புதுச்சேரியில் மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: அரசு மருத்துவமனையை கண்டித்து மறியல்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். அலட்சியமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டி அரசு மருத்துவமனையை கண்டித்து பெற்றோர், கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அலட்சியமாக செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் உறுதி தந்தார்.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட சின்னப்பேட் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் - ரேகா தம்பதிகளின் மகன் த்ரிஷாந்த். இவர் திருக்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று குளிப்பதற்காக ஹீட்டரில் தண்ணீர் சுட வைத்துள்ளார்.

அப்போது தண்ணீர் சுட்டு விட்டதா என்று கையை வைத்து பார்க்கும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

          

இதனை அடுத்து அவரை மீட்ட உறவினர்கள் மண்ணாடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் இல்லாததால் பணிபுரிந்த ஊழியர்கள் காரை வாடகை எடுத்து வந்து மாணவனை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வாடகை கார் மூலம் தனியார் மருத்துவமனையில் மாணவனை அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், 20 நிமிடத்துக்கு முன்பே அழைத்து வந்து இருக்கலாமே. மாணவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் திருக்கனூர் - புதுச்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

உறவினர்களின் மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தொகுதி எம்எல்ஏவும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் அமைச்சரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மண்ணாடிப்பட்டு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததும் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்களுமே காரணம் என அமைச்சரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்ற அமைச்சர் நமச்சிவாயம் பணியில் இருந்த மருத்துவர்களிடம் விசாரித்தார்.

அவருடன் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தை விளக்கினார்கள். அரசு அனைத்து வசதிகளுடன் மருத்துவமனையை ஏற்பாடு செய்துள்ள நிலையில், மருத்துவர் இல்லை. ஆம்புலன்ஸ் வசதி இல்லை எனக் கூறி அனுப்பியது தவறு என்று கண்டித்த அமைச்சர், அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமப்புற மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தான் அந்தந்த பகுதியில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் நகரப் பகுதிகளில் உள்ள பொது மருத்துவமனைக்கு அனுப்பது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT