தமிழகம்

புதுச்சேரி என்டிஏ கூட்டணி குழப்பம்: பாஜக தலைவர்கள் சந்திப்புக்கு பின் ரங்கசாமி முக்கிய முடிவு!

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் என் டிஏ கூட்டணியில் குழப்பம் நிலவும் சூழலில் டெல்லியில் இருந்து திரும்பும் பாஜக தலைவர்களை சந்தித்த பின்னர் கூட்டணி குறித்து முடிவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராக இருக்கும் ரங்கசாமி புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்க எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இதனால் இக்கூட்டணியில் இருந்து விலகும் நிலை அவருடைய என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் தொடர வேண்டுமென பாஜக விரும்புகிறது இதற்காக என்.ஆர்.காங்கிரஸ் உடன் மீண்டும் கூட்டணி அமைத்து  தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது . இதில் என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.மீதமுள்ள 14 இடங்களில் பாஜக-10, அதிமுக-2, லட்சிய ஜனநாயக கட்சி-2 என பாஜக திட்டமிட்டது. இதில் லட்சிய ஜனநாயக கட்சியை சேர்க்கக்கூடாது என ரங்கசாமி  வலியுறுத்தினார். லட்சிய ஜனநாயக கட்சி சேர்த்தால்  வெளியேறுவோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சி கட்சி சேர்க்கப்படாது. அதற்கு பதிலாக அக்கட்சியை சேர்ந்த இருவருக்கு சீட்டு வழங்கப்படும். அவர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டது. இதையும் ரங்கசாமி ஏற்கவில்லை.

இந்நிலையில் டெல்லியில் பாஜக தலைவர்கள் முகாமிட்டுள்ளனர். இச்சூழலில் அவரது கோரிக்கையை மத்திய பாஜக ஏற்பது தொடர்பாக விவாதித்து உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசியத் தலைவர் நிதின் விபின் ஆகியோர் உடன் புதுச்சேரி தலைவர்கள் பேசினர்.

இதற்கிடையில் அரசியல் முக்கிய முடிவு எடுக்கும் போதெல்லாம் தன்னுடைய குரு அப்பா பைத்தியம் சுவாமிகளை வணங்கி ஆன்மிக உத்தரவைப் பெற்று முடிவு எடுப்பது வழக்கம். அதற்காக முதல்வர் ரங்கசாமி சேலத்துக்கு சென்றார். அங்கு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் தங்கள் கோரிக்கை தொடர்பாக பாஜகவிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் முடிவு எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இச்சூழலில் டெல்லியில் முகாமிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம், பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மத்திய அமைச்சரும் தேர்தல் ஒருங்கிணைப்பாளரான மன்சுக் மாண்டவியாவுடன் தனி விமானத்தில் இன்று மதியம் புதுச்சேரி திரும்புகின்றனர்.

நேற்று இரவு நடந்த பாஜக நாடாளுமன்ற தேர்தல் குழு கூட்டத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர் ..

ரங்கசாமிக்கு ஒதுக்கிய 16 தொகுதிகளை விடுத்து பாஜக போட்டியிடும்  வேட்பாளர்களை பாஜக இன்று வெளியிடும் என தெரிகிறது .

டெல்லி சென்று திரும்பவுள்ள பாஜக தரப்பில் பேசுகையில், “இன்று மத்திய அமைச்சருடன் புதுச்சேரி திரும்புகிறோம். ரங்கசாமியை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சந்திப்பார். அதன்பிறகு மேலிடத்தில் பேசி கூட்டணி தொடர்பாக இறுதி முடிவை பாஜக தலைமை அறிவிக்கும்.” என்கின்றனர்.

இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தனது கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையை நடத்தவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக முடிவைத் தொடர்ந்து அவரது செயல்பாடு தனித்து போட்டியா- என்டிஏ உடன் இணைந்து களம் காண்பதா என்பதை முடிவு செய்வார்கள்.

          
SCROLL FOR NEXT