சென்னை: மோடி அரசின் அழுத்தம் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலில் சில பகுதிகளை பதிப்பகத்தார் நீக்க இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கை: பெங்குயின் வேர்ல்ட்வைட் நிறுவனம், சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலை எந்தவித மாற்றமும் செய்யாமல், உலகம் முழுவதும் அதன் அசல் வடிவிலேயே வெளியிடத் தயாராக உள்ளது.
ஆனால், இந்தியாவில் அதை வெளியிடுவதற்கு, பதிப்பு நிறுவனம் சில மாற்றங்களைச் செய்ய விரும்புகிறது. உலகம் முழுவதும் அசல் வடிவில் வெளியிடப்படும் ஒரு நூலை இந்தியாவில் மட்டும் அப்படியே வெளியிட முடியாததற்கு என்ன காரணம்? சோனியா காந்தியின் வாழ்க்கையானது தியாகத்துக்கும், அர்ப்பணிப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
அவர் நாட்டுக்காக ஆற்றிய பணியின் தூய்மையும் கண்ணியமும் போற்றத்தக்கது. இப்படிப்பட்ட சிறப்பு மிக்க, மூத்த அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான சோனியா காந்தியின் புத்தகத்தை அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்துவது கருத்துச் சுதந்திரத்தையே படுகொலை செய்வதற்கு நிகரானது.
உண்மையான பிரச்சினை என்னவென்றால், மோடி ஆட்சிக் காலத்தில் இந்தியப் பகுதிகளை மோடி, ஆர்எஸ்எஸ் மற்றும் சீனா ஆக்கிரமித்தது தொடர்பான பகுதிகளை புத்தகத்திலிருந்து நீக்குமாறு பெங்குயின் நிறுவனம் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த உண்மையை இந்திய மக்களிடமிருந்து ஏன் மறைக்க வேண்டும், அழுத்தத்தின் பேரில் உண்மைகளை மாற்றுமாறு பதிப்பகங்களையும் மோடி அரசு நிர்பந்திக்குமா? இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.