எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 18, 19 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 109-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வரும் 18, 19 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், தாங்கள் சார்ந்த மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தென் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உரையாற்ற உள்ளார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் கே.பி. முனுசாமியும், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசனும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் மு. தம்பிதுரையும், கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் எஸ்.பி. வேலுமணியும் உரையாற்ற உள்ளனர்.
இதேபோல், வரும் 19ம் தேதி திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் நத்தம் விஸ்வநாதனும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் சி. பொன்னையனும், நாமக்கல் மாவட்டத்தில் பி. தங்கமணியும், திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமனும், வட சென்னை கிழக்கு மாவட்டத்தில் டி. ஜெயக்குமாரும், விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகமும் உரையாற்ற உள்ளனர்.