டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்
சென்னை: ‘‘போதைப் பொருள்கள் நடமாட்டம் குறித்த தகவல்களைப் போலீஸாருக்கு மாணவர்கள் தெரிவிக்க வேண்டும். போதை கடத்துபவர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துகளை முடக்குவது உட்பட கடும் நடவடிக்கை எடுப்போம்’’ என்று டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உலக போதைப் பொருள் எதிர்ப்பு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தமிழக காவல் துறை மது விலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி சங்கர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பேசியதாவது:
கஞ்சா, செயற்கை போதைப் பொருள்கள் தமிழகத்தில் தயாரிக்கப்படுவதில்லை. அவை பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படுகின்றன. நாட்டின் செல்வமாக இருக்கும் மாணவர்கள், கஞ்சா மற்றும் செயற்கை போதைப் பொருள்களுக்கு இரையாக வேண்டாம். சமூக ஊடகங்கள், போதைப் பொருள் ஆகிய இரண்டு விஷங்களுக்கு இன்றைய இளைஞர்கள் அடிமையாகின்றனர்.
போதைப் பொருட்களைப் பயன்படுத்தினால், மாணவர்களின் கல்வி பாதிப்பதுடன் குடும்ப வாழ்க்கையும் பாழாகிவிடும். எதிர்கால கனவு சிதைந்து விடும். நட்பு வட்டத்தில் மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்வு, வேலை உள்ளிட்ட சில விஷயங்களால் மன அழுத்தத்தில் சிக்கும் இளைஞர்கள், போதையின் பக்கம் செல்ல வேண்டாம். மாறாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட விளையாட்டு, யோகா, நடனம் போன்றவற்றில் கவனம் செலுத்தி தங்களது திறனையும் வளர்த்துக் கொள்ளலாம்.
விளையாட்டு வேண்டாம்
சிலர் விளையாட்டாகவும், சிலர் உள்நோக்கத்துடன் போதைப் பொருளைப் பயன்படுத்துமாறு இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் பரிந்துரை செய்கின்றனர். அவர்களிடம் இளைஞர்கள், போதைப் பொருள் எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் என்று உறுதியாக கூறுங்கள். போதைப் பொருள்களை விற்பவர்கள், மாணவர்களை குறி வைத்து, அவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்ல விடாமல் தடுக்கின்றனர். மேலும் இப்படிப்பட்ட நபர்களை, இளைஞர்களும், மாணவர்களும் நிராகரிக்க வேண்டும்.
எதிர்காலம் மோசமாகும்
அறியாமையால் இளைஞர்கள் போதைப் பொருளைப் பயன்படுத்தினால், அவர்களது எதிர்காலம் மோசமானதாகிவிடும். மேலும் அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்கவும் நேரிடும். நமது மாநிலம், கல்வி மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கும் வேளையில், இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரிப்பது பொருளாதார வளர்ச்சிப் பாதையில் ஒரு கேள்விக்குறியை உருவாக்கி விடும். போதைப் பொருட்களைத் தடுப்பதில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பேசினார்
முன்னதாக நிகழ்ச்சியில் மாணவர்களுடன் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் கலந்துரையாடினார். அப்போது, ‘‘தமிழகத்தில் பல இடங்களில் போதைப் பொருட்கள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக உள்ளது. அதை காவல் துறையால் முற்றிலும் தடுக்க முடியுமா?’’ என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த டிஜிபி மகேஷ்குமார் கூறியதாவது: போதைப் பொருள்களை ஒழிப்பதில் மாணவர்களும் பங்கேற்க வேண்டும். எங்கெல்லாம் போதை நடமாட்டம் உள்ளது என்பது குறித்த தகவல்களைத் தைரியமாக போலீஸுக்குத் தகவல் கொடுங்கள். நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்கிறோம்.
போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடைய வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு மற்றும் காவல் துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் கூறினார்.