காவல்துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து திடீரென வருகை வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

 
தமிழகம்

“விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு தனி அதிகாரமா?” - பெ.சண்முகம் காட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டோர் வலுகட்டாயமாக இழுத்து சென்று கைது

செய்திப்பிரிவு

விழுப்புரம்: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர்கள் மீது தடியடி நடத்திய டெல்லி போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று இரவு 7 மணி முதல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, போலீஸார் குவிக்கப்பட்டனர். இருப்பினும் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்ட களத்துக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு, அனுமதி இல்லை என்று கூறி வலுகட்டாயமாக இழுத்து சென்று போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், இதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் விழுப்புரம் போராட்ட களத்துக்கு வந்தார். மேலும் அவர் தரையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார்.

அப்போது அவர் கூறியதாவது: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் நீர் தேர்வு வினாத்தாள் வெளியானதால் மறுதேர்வு நடத்தப்பட்டது.

இதனால் நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவர், ராஜினாமா செய்யவில்லை என்றால், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மோடியை நீக்க வேண்டும்.

டெல்லியில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மீது கொடூரமான தாக்குதலை போலீஸார் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெறுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ‘நாடே விழித்தெழு’ என்ற முழக்கத்துடன் தமிழகத்தில் இரவு 10 மணி வரை போராட்டம் நடத்தப்படும் என்ற எங்களது முடிவுக்கு காவல்துறையின் உயர் அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர். தமிழகத்தில் 25 இடங்களில் போராட்டம் நடத்தப்படுகிறது.

காவல்துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து திடீரென வருகை வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆனால், விழுப்புரத்தில் மட்டும் அராஜகமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். தமிழக காவல்துறைக்கு அப்பாற்பட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை என்பது தனித்து செயல்படுகிறதா? தனி அதிகாரம் பெற்றுள்ளதா? என்ற கேள்வியை எழுப்புகிறேன்.

இதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும். அவர்கள் அனைவரும், நாங்கள் திட்டமிட்டப்படி இரவு 10 மணி வரை போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். உயர் அதிகாரிகளுக்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நடந்து கொள்ள வேண்டும்.

அத்துமீறி நடந்து கொண்டால், எங்களது போராட்டம் வேறு மாதிரியாக இருக்கும். கைது செய்யப்பட்ட அனைவரையும், போராட்டகளத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பது என்பது காவல்துறையின் பொறுப்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை, போராட்ட களத்துக்கு கொண்டு வந்து போலீஸார் விடுவித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

SCROLL FOR NEXT